தாய்மாமன் தங்க மோதிர திட்டம் தொடக்கம்.. நேற்று ஒரே நாளில் இத்தனை குழந்தைகளுக்கா..!! அடேங்கப்பா..!!
தமிழகம் முழுவதும் 107 அரசு மருத்துவமனைகளில் இவை பாதுகாப்பாக வைக்கப்பட்டு, சிறப்பு ஏற்பாடுகளுடன் விநியோகம் தொடங்கியது.
மதுரையில் நேற்று முதல்வர் விஜய் தொடங்கி வைத்த ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் முன்னோடி திட்டமாக விளங்குகிறது. தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் வாக்குறுதியாக இருந்த இத்திட்டம், ஆட்சி அமைந்த பிறகு முதல்வரின் பிறந்த நாளான ஜூன் 22, 2026 முதல் அமலுக்கு வந்தது.
அரசு மருத்துவமனைகளில் பிரசவங்களை ஊக்குவிக்கும் நோக்கில் தொடங்கப்பட்ட இத்திட்டத்திற்கு இந்த ஆண்டு மட்டும் ரூ.755.83 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 1.28 லட்சம் 22 கேரட் பிஐஎஸ் முத்திரையுடன் கூடிய தங்க மோதிரங்கள் கொள்முதல் செய்யப்பட்டன. தமிழகம் முழுவதும் 107 அரசு மருத்துவமனைகளில் இவை பாதுகாப்பாக வைக்கப்பட்டு, சிறப்பு ஏற்பாடுகளுடன் விநியோகம் தொடங்கியது.
நேற்று மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நடைபெற்ற சிறப்பு விழாவில் முதல்வர் விஜய், 30 குழந்தைகளுக்கு நேரடியாக மோதிரம் அணிவித்து திட்டத்தை தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் ஒரே நாளில் 3,297 குழந்தைகளுக்கு மோதிரங்கள் வழங்கப்பட்டதாக பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இத்திட்டம் தமிழ்நாட்டில் நிரந்தரமாக வசிக்கும் தாய்மார்களுக்கு மட்டும் பொருந்தும்.
இதையும் படிங்க: பிஞ்சு குழந்தைகள் கைகளில் மின்னும் தாய்மாமன் தங்க மோதிரம்.. இது வாழ்நாள் பந்தம்! நெகிழ்ந்த அமைச்சர் அருண்ராஜ்..!!
ஆரம்ப சுகாதார நிலையம் முதல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வரை அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் இது பொருந்தும். முதல் குழந்தைக்கு மட்டும் என்ற கட்டுப்பாடு இல்லை; அனைத்து குழந்தைகளுக்கும் வழங்கப்படும். ஒரே நிபந்தனை என்னவென்றால், கர்ப்பிணித் தாய்மார்கள் PICME மற்றும் RCH-ID பதிவுகளை கட்டாயம் செய்திருக்க வேண்டும். ஜூன் 22 முதல் செப்டம்பர் 27 வரை பிறந்த சுமார் 1.28 லட்சம் குழந்தைகளுக்கு 107 மையங்கள் வழியாக மோதிரங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
ஒவ்வொரு மோதிரத்திலும் தனித்துவமான வரிசை எண், பாதுகாப்பு முத்திரை மற்றும் தாயின் RCH அடையாள எண் பொறிக்கப்பட்டுள்ளன. இதனால் போலியானவை தடுக்கப்படுவதுடன், விநியோகமும் வெளிப்படையாக நடைபெறுகிறது. இத்திட்டம் குழந்தைகளின் நலனையும், அரசு மருத்துவமனைகளின் பயன்பாட்டையும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களிலும் மோதிரங்கள் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழக அரசின் இந்த முயற்சி, குழந்தைகளுக்கு வாழ்நாள் நினைவுப் பரிசாக அமையும் என்றும் பாராட்டப்படுகிறது.
இதையும் படிங்க: 1.28 லட்சம் குழந்தைகளுக்கு தாய்மாமன் தங்க மோதிரம்: தமிழக அரசின் மெகா திட்டம் தொடக்கம்!