×
 

வெற்றி பொங்கட்டும்.. புதிய விடியல் பிறக்கட்டும்! தமிழக மக்களுக்கு விஜய், இபிஎஸ், அன்புமணி பொங்கல் வாழ்த்து..!

தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, உலகெங்கிலும் வாழும் தமிழ் மக்களுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது மனமார்ந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு பிறப்பினை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் தமிழக மக்களுக்குத் தங்களது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

விவசாயிகளின் உழைப்பைப் போற்றும் விதமாகவும், இயற்கைக்கு நன்றி செலுத்தும் விதமாகவும் கொண்டாடப்படும் இந்தப் பொங்கல் திருநாளில், தமிழகத்தின் மூலை முடுக்கெங்கும் ‘பொங்கலோ பொங்கல்’ முழக்கம் விண்ணைத் தொட்டுள்ளது. இந்தப் பண்பாட்டுத் திருவிழா மக்களின் வாழ்வில் புதிய நம்பிக்கையையும், எழுச்சியையும் ஏற்படுத்த வேண்டும் எனத் தலைவர்கள் தங்களது வாழ்த்துச் செய்திகளில் குறிப்பிட்டுள்ளனர். குறிப்பாக, 2026-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், தலைவர்களின் இந்த வாழ்த்துக்கள் அரசியல் ரீதியாகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளன.

தை முதல் தேதியான இன்று தமிழகம் முழுவதும் பொங்கல் திருநாள் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், ‘வெற்றிப் பொங்கல்’ எனத் தனது அரசியல் பாணியில் வாழ்த்துத் தெரிவித்துள்ள நடிகர் விஜய் முதல், உழவர்களின் நலனை முன்னிறுத்தி வாழ்த்தியுள்ள எடப்பாடியார் வரை, அனைத்துத் தலைவர்களின் வாழ்த்துச் செய்திகளிலும் தமிழர்களின் வாழ்வியல் மேம்பாடு மற்றும் புதிய நம்பிக்கை குறித்த கருத்துகளே மேலோங்கி நின்றன.

இதையும் படிங்க: “காந்தி பெயரை அழிக்கப் பார்க்காதீங்க!” – பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் நேரடி எச்சரிக்கை!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, "உழவர் பெருமக்கள் ஏற்றம் பெற்றிட அதிமுக ஆட்சிக் காலத்தில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டதை நினைவுகூர்ந்து, மக்கள் எல்லா நலமும் வளமும் பெற்றுச் சீரோடும் சிறப்போடும் வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன்" எனத் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். 

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது வாழ்த்து செய்தியில், தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் திருநாளில், உலகெங்கும் வாழும் தமிழ் உறவுகளின் வாழ்வில் அன்பும் அமைதியும் நிறைந்து, நலமும் வளமும் பெருகட்டும். அனைவருக்கும் வெற்றிப் பொங்கல் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள் எனத் தெரிவித்துள்ளார்.

பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ், "புதிய நம்பிக்கை மற்றும் புதிய வெற்றிகள் அனைத்தும் தமிழர்களுக்குக் கிடைக்கட்டும்" எனத் தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், தமிழ் சகோதர சகோதரிகளுக்கு பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள். இந்த ஆண்டு, இயற்கையுடனான நமது தொடர்பையும், நம் நாட்டின் வளமான பாரம்பரியத்தையும் போற்றும் விதமாக, இந்த பொங்கல் கொண்டாட்டம் இருக்கிறது. ஒற்றுமை மற்றும் நல்லிணக்க உணர்வு நிறைந்து, நாம் அனைவரும் முன்னேறுவோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: நேருவுக்கு செக் வைத்த ஸ்டாலின்! 1020 கோடி ஊழல் புகார்? DVAC விசாரிக்க முதலமைச்சர் உத்தரவு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share