இனி வீடு தேடி ரேஷன் பொருட்கள்.. தாயுமானவர் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்..!!
முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு தேடி ரேஷன் பொருட்கள் வழங்கும் 'முதலமைச்சரின் தாயுமானவர்' திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின்.
தமிழ்நாடு அரசு, முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் நலனை முதன்மையாகக் கருதி, “முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை” இன்று முதல் தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் மூலம், 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு அரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேஷன் பொருட்கள் நேரடியாக வினியோகிக்கப்படுகின்றன. இதனால், நியாய விலைக் கடைகளுக்கு நேரில் செல்ல முடியாதவர்களுக்கு பெரும் நிவாரணம் கிடைக்கும்.
இத்திட்டம் முதற்கட்டமாக, 34,809 நியாயவிலைக் கடைகள் மூலம் 15.81 லட்சம் குடும்ப அட்டைகளில் உள்ள 20.42 லட்சம் முதியவர்கள் மற்றும் 91,969 குடும்ப அட்டைகளில் உள்ள 1.27 லட்சம் மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 21.70 லட்சம் பயனாளிகளுக்கு சேவையாற்றுகிறது. ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மின்னணு எடைத்தராசு மற்றும் ePoS இயந்திரங்களுடன் கூடிய மூடிய வாகனங்களில் நியாயவிலைக் கடை விற்பனையாளர்கள் இந்தப் பொருட்களை வழங்குவர்.
இந்நிலையில் சென்னை தண்டையார்பேட்டையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இத்திட்டத்தை இன்று தொடங்கி வைத்தார். மேலும் இது திராவிட மாடல் ஆட்சியின் மக்கள் நலன் சார்ந்த மற்றொரு மைல்கல் என அவர் குறிப்பிட்ட அவர், கொருக்குப்பேட்டையில் மாற்றுத்திறனாளி வீட்டிற்கு நேரடியாக சென்று ரேஷன் பொருட்களை வழங்கினார். இத்திட்டத்தின் கீழ், ஆதார் அங்கீகாரத்துடன் வேன்கள் மூலம் ரேஷன் பொருட்கள் வீடுகளுக்கு வழங்கப்படுகின்றன. இதற்காக கூட்டுறவு மற்றும் உணவு துறை அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயல்படுகின்றனர்.
இதையும் படிங்க: செப்.-ல் முதல்வர் மு.க ஸ்டாலின் வெளிநாடு பயணம்.. எந்தெந்த நாடுகள் தெரியுமா..?
முன்னதாக, சென்னை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் சோதனை அடிப்படையில் இத்திட்டம் தொடங்கப்பட்டு, இப்போது மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இத்திட்டம், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதோடு, அரசின் மக்கள் நலத் திட்டங்களுக்கு புதிய பரிமாணத்தை அளிக்கிறது. “உங்களுடன் ஸ்டாலின்” போன்ற மற்ற திட்டங்களைப் போலவே, இதுவும் மக்களை மையப்படுத்திய ஆட்சியின் அடையாளமாகத் திகழ்கிறது.
முதலமைச்சர் ஸ்டாலின் இத்திட்டத்தை “நலம் காக்கும் ஸ்டாலின்” முயற்சியின் ஒரு பகுதியாக அறிவித்து, மக்கள் நலனே தன் நலன் என்பதை வெளிப்படுத்தியுள்ளார். இந்தியாவுக்கே முன்மாதிரியாக திகழும் இத்திட்டம், சமூக நலத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இதையும் படிங்க: உயர்கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற்ற 136 மாணவ மாணவிகள்.. மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர்..!!