வீதிக்கு வந்த மோதல்...40 வருஷமா கட்சி நடத்திகிட்டிருக்கிறோம்...மேயர் பிரியாவிடம் வாக்குவாதம் செய்த வட்டம்...
அரசியல் கட்சிகள் பெண்ணுரிமை என்று முழங்கினாலும் பெண்களை அதிகாரத்துக்கு வர விட மாட்டார்கள், வந்தாலும் அவர்களின் உறவினர்களே ஆதிக்கம் செலுத்துவார்கள். இதற்கு உதாரணமாக நேற்று மேயர் பிரியாவை அவரது பதவிக்கு மரியாதை கொடுக்காமல் நடத்த நிகழ்வு வைரலாகி வருகிறது.
தமிழகத்தில் திமுக, அதிமுக இரண்டு கட்சிகளிலும் பெண்கள் அணி இருக்கும். அதில் பெண் தலைவர்களாக வருபவர்கள் இருப்பார்கள். அதே நேரம் பெண்களுக்காக ஒதுக்கப்படும் உள்ளாட்சி அமைப்புகளில் தகுதியான பெண்கள் இருக்க வாய்ப்பில்லாத பட்சத்தில் அங்கு கட்சினரின் மனைவி அல்லது உறவுப்பெண் கொண்டுவரப்படுவார். அதன் பின்னர் அவரது கணவரோ அல்லது அந்த ஆண் உறவினர் கட்சிக்காரரே அந்தப்பதவியின் அதிகாரியாக செயல்படுவார்.
இதற்கு பல உதாரணங்கள் இருக்கிறது என்றாலும் சென்னையின் பிரதானமான இரண்டு மாநகராட்சிகளில் பெண்களுக்கான கோட்டாவில் இரண்டு பெண் மேயர்கள் தேர்வு செய்யப்பட்டனர். ஒருவர் கட்சிக்காரர். தாம்பரம் மேயராக வசந்தகுமாரி தேர்வு செய்யப்பட்டார். அவர் இன்றளவும் செயல்பட முடியாதபடி அமைச்சர் த.மோ.அன்பரசன், இ.கருணாநிதி ஆகியோர் இடையூறு கொடுத்து வருவதாக கட்சிக்காரர்களே பொதுவெளியில் பேசுகின்றனர். இ.கருணாநிதியின் சகோதரர் மண்டலக்குழு தலைவராக இருக்கிறார். அவர்தான் உண்மையான மேயர்போல் செயல்படுகிறார் என்ற பேச்சும் உண்டு. இன்னொருவர் சென்னை மேயர் பிரியா, அரசியலுக்கே சம்பந்தமில்லாதவர். அவர்தான் பாரம்பரியமிக்க சென்னை மாநகராட்சியின் பெண் மேயர்.
இதையும் படிங்க: 200 இலக்கு... நான் நேரடியாக பரப்புரைக்கு செல்லாமலேயே வெற்றி தொடங்கி வைத்த ஈரோடு கிழக்கு... மு.க.ஸ்டாலின் பெருமிதம்..!
உள்ளாட்சி தேர்தலில் திருத்தப்படி சென்னை மேயர் பட்டியலின பெண்களுக்கான பதவியாக ஒதுக்கப்பட்டது. சென்னை மாநகராட்சியை பெரும்பான்மை உறுப்பினர்கள் அடிப்படையில் திமுக கைப்பற்றியது. இதில் பட்டியலினத்தை சேர்த்த பெண் கவுன்சிலர்கள் பலர் போட்டியிட்டு வென்றிருந்தாலும் அரசியலுக்கே சம்பந்தமில்லாத முன்னாள் எம்.எல்.ஏ செங்கை சிவத்தின் பேத்தியான பிரியாவை சேகர்பாபு தேர்வு செய்தார். இதில் மா.சுவுக்கும் இவருக்கும் போட்டி நிலவியது. மாசுவும் தன் ஆதரவாளர் பெண் ஒருவரை தேர்வு செய்து வைத்திருந்த நிலையில் கட்சி மேலிடத்தில் தனக்கிருந்த செல்வாக்கை பயன்படுத்தி பிரியாவை தேர்வு செய்ய வைத்தார் சேகர்பாபு.
பிரியாவுக்கு சரியாக தமிழ் சரளமாக பேச வராது, மேடை அரசியலே தெரியாது, அரசியல், பொது இடங்களில் வந்தவரில்லை. இதை திமுகவின் பெரிய தலைவர்கள் உணரவில்லை. இதன் விளைவு பொதுவெளியில் திமுக தலைவர்களால் பலமுறை மேயர் பிரியா பதவிக்குரிய மதிப்புடன் நடத்தப்படாதது வெளிப்படையாக வெளிப்பட்டது. அப்போதெல்லாம் அதற்கு சில காரணங்களை கூறினர். பிரியாவை மேயராக நடத்தவில்லை என்பது வெளிப்படையாக தெரிந்தது.
இந்நிலையில் தான் நூலக கட்டிட அடிக்கல் நாட்டு விழாவுக்காக வந்த மேயர் பிரியாவை பதவிக்குரிய கண்ணியமின்றி திமுக மாவட்ட செயலாளர், பகுதி, வட்டச்செயலாளர் என கண்டபடி நிறுத்தி வைத்து கேள்வி கேட்பது காணொளியாக வெளியாகி வைரலாகியுள்ளது. இதில் அவமானப்படுத்தப்பட்டது பிரியா அல்ல கண்ணியத்துக்குரிய மேயர் பதவி என்பதை இவர்கள் உணர்ந்தார்களா என்கிற கேள்வி எழுகிறது. அவர் பெண் என்பதால் அவரிடம் வாக்குவாதம் செய்கின்றனர். இதே இடத்தில் சேகர் பாபு போன்றோர் மேயராக இருந்தால் வட்டச்செயலாளர் வாய்திறக்க முடியுமா?
40 ஆண்டு காலம் கட்சியை வளர்த்தவர்கள் நாங்கள் என்று கூறுவது எதனால், நீங்கள் எல்லாம் நேற்று வந்தவர் என்கிற தொனி தானே. இதுதான் பெண்கள் பதவிக்கு வந்தாலும் அவர்களுக்கு கொடுக்கப்படும் மரியாதை. இதில் கூடுதலான விஷயம் மேயர் பிரியா “அண்ணா நானே பொறுப்பேற்றுக்கொள்கிறேன்” என பொதுவெளியில் மன்னிப்பு கேட்கிறார். இதுபோன்ற நடவடிக்கைகள் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டை காக்கும் கட்சிக்கு சரியான ஒன்றல்ல கட்சித்தலைமை கவனிக்குமா என்பதே அனைவரது கேள்வி.
இதையும் படிங்க: இதை விஜயிடமே சொல்லி விட்டேன்… திமுகவுக்கு இதுதான் வழக்கம்… மிகப்பெரிய அபாயம்..! எச்சரித்த பிரேமலதா..!