திமுக கூட்டணியை பிளவுபடுத்த இலக்கு.. விசிக ஒருநாளும் பலிகடாவாகாது.. திருமாவளவன் உறுதி!!
திமுக கூட்டணியை பிளவுபடுத்த விசிக ஒரு இலக்காக தேர்வு செய்யப்பட்டிருப்பதாக விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தற்போதே அதற்கான பணிகளை மிக தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். கூட்டணி பேச்சுவார்த்தை ஒருபுறம் மிக பரபரப்பாக நடைபெற்று வருகிறது. அதிமுக – பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டணியில் மேலும் பலகட்சிகள் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் திமுக கூட்டணி ஏற்கனவே இருக்கும் கட்சிகளுடன் சில புதிய கட்சிகளும் இணையும் என கூறியுள்ளனர். குறிப்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு முக்கியத்துவம் அதிகரித்து வருகிறது.
திமுக கூட்டணியில் விசிக முக்கிய அங்கமாக இருந்து வந்தாலும், அதிமுக - பாஜக கூட்டணி மற்றும் தவெகவிடம் இருந்து விசிகவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு கொண்டே இருக்கிறது. அதற்கேற்றபடி திருமாவளவன், பாஜக மற்றும் பாமக இருக்கும் கூட்டணியில் விசிக இடம்பெறாது என்று கூறி இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் அதிமுகவுடன் பாஜக இருப்பதால், அவர்களுடன் கூட்டணி வைக்க முடியாது என்றும் திருமாவளவன் ஒரு கருத்தை கூறியது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் திமுக கூட்டணியை பிளவுபடுத்த விசிக ஒரு இலக்காக தேர்வு செய்யப்பட்டிருப்பதாக விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், தமிழக அரசியலில் விசிக குறி வைக்கப்படவில்லை. திமுகவும், திமுக கூட்டணி தான் அவர்களின் இலக்கு. திமுக கூட்டணியை பிளவுபடுத்த விசிக ஒரு இலக்காக தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. விசிக களத்தில் உறுதியாக மக்களுடன் இருப்பதால், தேர்வு செய்யப்பட்டிருக்கலாம். அதற்கு விசிக ஒருநாளும் பலிகடாவாக போவதில்லை. பாமக, பாஜக ஆகிய 2 கட்சிகளும் பெயரளவில் வேறு வேறு இயக்கங்கள் என்றாலும், வலதுசாரி அரசியலை ஏந்தி களமாடக் கூடியவர்களாக இருக்கிறார்கள் என்பது ஊரறிந்த உண்மை.
பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையிலான மோதலை சரி செய்வதற்கு கூட, ஆர்எஸ்எஸ்காரர்கள் பஞ்சாயத்து செய்யும் அளவிற்கு நிலைமை போயிருக்கிறது. சோசியல் இன்ஜினியரிங் என்ற சொல்லை பயன்படுத்தியது முதலே அவர் வலதுசாரி அரசியலை நோக்கி செல்ல தொடங்கிவிட்டார். பாமகவை பொறுத்தவரை சோசியல் இன்ஜினியரிங் என்பது தலித் வெறுப்பு அரசியல். 81 சதவிகிதமா, 19 சதவிகிதமா.. மோதிப் பார்க்கலாமா என்று வெளிப்படையாக பேசும் அளவிற்கு அவர் இடதுசாரி அரசியலில் இருந்து விலகி சென்றுவிட்டார்.
இதையும் படிங்க: திமுக அதிமுகவுக்கு அடுத்து நாங்க தான்... ஒரே போடாக போட்ட திருமாவளவன்!!
அதனால் பாமக, பாஜகவுடன் எந்த நிலையில் தேர்தல் கூட்டணி கிடையாது என்று அறிவித்தது தேர்தல் கணக்கு அரசியலுக்காக அல்ல. அதேபோல் பாஜகவுடன் சேர்வதன் மூலமாக அதிமுகவுக்கும் பாதிப்பு ஏற்படும் என்று கவலைப்படுகிறோம். அதிமுகவோடு முரண்பாடு இருந்தாலும், அதிமுகவை மெல்ல மெல்ல சங்பரிவார் கும்பல் விழுங்கிவிடும் என்ற கவலையில் தான் சொல்கிறோம். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 2 கருத்தை கூறி இருக்கிறார்.
கூட்டணி ஆட்சி அல்ல என்றும், எந்த கொம்பனாலும் அதிமுகவை கபளீகரம் செய்ய முடியாது என்று கூறுகிறார். இதனை யாருக்காக சொல்கிறார்? திமுக அதிமுகவுக்கு எதிரான கட்சி. அதனால் அதிமுகவினர் ஒருநாளும் உதயசூரியனுக்கு வாக்களிக்க மாட்டார்கள். இன்றைய சூழலில் அதிமுகவை விழுங்க வேண்டும் என்று நினைக்கிற கட்சி யார்.. அது பாஜக தான். இந்த 2 பதில்களுமே பாஜகவுக்கு தான் கூறி இருக்கிறார். அதில் அதிமுகவை கபளீகரம் செய்ய முடியாது என்ற பதில் அமித்ஷாவுக்கானது.
அதிமுக - பாஜக இடையிலான உணர்வு உளப்பூர்வமானது அல்ல. அதுமட்டுமல்லாமல் பெரியார், அண்ணாவை கொச்சைப்படுத்தும் வீடியோவை வெளியிடுகிறார்கள். அது அதிமுகவின் அடிமடியில் கை வைக்கும் முயற்சி. இது வெறும் தேர்தல் உறவாக மட்டுமே பார்க்கிறார்கள். அதனால் அதிமுகவுக்கு பிரச்சனை உருவாகும். அதிமுக கட்சியை பாதுகாக்க வேண்டுமென்றால், அவர்கள் கூட்டணியை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
இதனை எந்த உள்நோக்கத்திற்காகவும் பேசவில்லை. அதிமுகவை அழியவிடாமல் பாதுகாக்க வேண்டுமென்றால், பாஜகவுடன் உறவு வைத்திருப்பதை தவிர்க்க வேண்டும். அதிமுக திராவிட இயக்கம் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. சமூகநீதி இயக்கம் என்று நம்புகிறேன். அந்த அடிப்படையில் அதிமுகவின் தலைமை இயங்க வேண்டும். இதில் எனக்கு எந்த நோக்கமும் கிடையாது என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: அஜித்குமார் கொலை அரச பயங்கரவாதம்.. திருமாவளவன் காட்டம்..!