பாஜகவோட சேர்ந்தா அவ்வளவுதான்! நல்ல எண்ணத்தில் தான் பேசினேன்... இபிஎஸ்க்கு திருமா பதிலடி!
பாஜகவால் அதிமுக பாதிக்கப்படக்கூடாது என்ற நல்ல எண்ணத்தில் தான் பேசுவதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கோவையில் இருந்து தனது சுற்றுப்பயணத்தை தொடங்கி இருக்கிறார். மக்களை சந்தித்து பேசும் அவர், திமுக அரசின் குறைபாடுகளை சுட்டிக்காட்டி வருகிறார். இந்த நிலையில் நேற்று, மக்கள் மத்தியில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, பிரச்சனை என்ற பேச்சுக்கு அதிமுகவில் இடமில்லை என்றும் திமுக கூட்டணியில்தான் பிரச்சனை இருப்பதாகவும் தெரிவித்தார். திமுக மக்களின் பிரச்சனையை தீர்க்கவில்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கூறியுள்ளதாகவும், திமுக அரசின் குறைகளை எடுத்துரைக்கும் சிபிஎம் மாநில செயலாளர் சண்முகத்தை இபிஎஸ் பாராட்டியும் பேசினார்.
அதிமுகவும் பாஜகவும் இணக்கமாக இல்லை எனக் கூறுவதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் யார் என்று கேள்வி எழுப்பினார். கூட்டணி ஆட்சி விவகாரத்தில் உள்ளே ஒன்று வெளியே ஒன்றை வைத்துக்கொண்டு திருமாவளவன் பேசுவதாக குற்றம் சாட்டினார். எடப்பாடி பழனிச்சாமியின் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் விதமாக திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, தான் ஜெயலலிதாவின் தம்பியாக அரசியல் செய்தவன் என்பது அதிமுகவினருக்கு தெரியும் என்றும் பாஜகவால் அதிமுக பாதிக்கப்படக்கூடாது என்ற நல்ல எண்ணம் உள்ளதாகவும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: சீண்டும் காங்கிரஸ்... சீறும் விசிக... ஆட்டம் காணும் அறிவாலய கூட்டணி...!
பாஜக காலூன்றிய இடங்களில் எல்லாம் என்ன நடந்தது என்பதை பார்த்திருக்கிறோம் எனக் கூறிய திருமாவளவன் திமுகவுக்கு எதிராக அணி திரள்பவர்கள் கூட்டணி கட்சி முழக்கத்தை வைத்துள்ளதாக தெரிவித்தார். அதிமுக எடுத்த கூட்டணி முடிவில் அவர்களுக்கே சந்தேகம் இருப்பதாக தெரிவித்த திருமாவளவன், அதிமுக தோழமைக் கட்சி என கருதுவதால் தான் கூட்டணி குறித்து விமர்சித்து வருகிறோம் என தெரிவித்தார்.
அதிமுக தனது செல்வாக்கை இழந்து விடக்கூடாது என்பதை தோழமையுடன் சுட்டிக் காட்டுவதாகவும், பாஜகவை அதிமுகவிற்கு ஏற்படும் பாதிப்பை அறியாமல் எடப்பாடி பழனிச்சாமி இருப்பதாகவும் தெரிவித்தார். சாதி ஒழிய வேண்டும் என்பது நோக்கம் தற்போதைக்கு அது முழுமையாக சாத்தியமில்லை என்றும் இந்து சமய அறநிலையத்துறை கல்லூரிகள் கட்டுவது நல்ல பணிதான் என்று கூறினார்.
இதையும் படிங்க: எவராலும் 100க்கு 100% வாக்குறுதி நிறைவேற்றவே முடியாது... திமுகவுக்கு வரிந்து கட்டி வந்த திருமா..!