மனுஷங்களா நீங்க எல்லாம்?... கண்முன் கிடந்த சடலம்... கண்டுகொள்ளாமல் மக்கள் செய்த காரியம்...!
திருவண்ணாமலை அருகே டீசல் லாரி கவிழ்ந்து விபத்தில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்தார்.
சாலையில் எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டால் மக்கள் ஓடோடிச் சென்று விபத்தில் சிக்கியவர்களை மீட்பதிலும், முதலுதவி செய்வதிலும் கவனம் செலுத்துவார்கள். அதன் பின்னர் ஆம்புலன்ஸ், தீயணைப்பு துறை, காவல்துறை போன்றவர்களுக்கு தகவல் கொடுத்து அடுத்தக்கட்ட நடவடிக்கைகளுக்கு உதவுவார்கள். ஆனால் திருவண்ணாமலையில் இன்று அதிகாலை அரங்கேறிய சம்பவம், மனித இனத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
திருவண்ணாமலை அருகே டீசல் லாரி கவிழ்ந்த விபத்தில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்தார். சாலையில் கிடந்த அவரது சரளத்தை கூட கண்டு கொள்ளாமல் கூட்டம் கூட்டமாக ஓடி வந்த மக்கள் லாரியிலிருந்து கசிந்த டீசலை குடம் குடமாக பிடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை அடுத்த தென் அரசம்பட்டு கிராமத்தில் இன்று காலை கோர விபத்து நடந்துள்ளது. பெங்களூருவில் இருந்து டீசல் ஏற்றிக்கொண்டு திருவண்ணாமலை வழியாக திருச்சி நோக்கி சென்ற டீசல் டேங்கர் லாரி, தென் அரசம்பட்டு கிராமம் அருகே சென்றுள்ளது. அப்போது அதே கிராமத்தைச் சேர்ந்த 70 வயது மூதாட்டி கனகாம்பரம் சாலையை கடக்க முயன்றுள்ளார்.
இதையும் படிங்க: கீழே விழுந்து நொறுங்கிய சிறிய ரக பயிற்சி விமானம்..!! ஜஸ்ட் மிஸ்ஸில் விமானி எஸ்கேப்..!!
டேங்கர் லாரி ஓட்டுனர் மூதாட்டி மீது மோதாமல் இருக்க லாரியை திருப்பபியுள்ளார். அப்போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த டேங்கர் லாரி மூதாட்டி கனகாம்பரத்தின் மீது மோதி சாலை ஓரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் மூதாட்டி கனகாம்பரம் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். அதே சமயம் சாலையில் கவிழ்ந்த டேங்கர் லாரியில் இருந்து டீசல் சாலைகளில் ஆறாக ஓடியது.
இந்த தகவலை கேள்விப்பட்டதும் கிராம மக்கள் கேன், குடம் என கையில் கிடைத்த பாத்திரங்களை எல்லாம் தூக்கிக் கொண்டு ஓடி வந்து, அதில் டேங்கர் லாரியில் இருந்து வழிந்த டீசலை போட்டா போட்டி போட்டு பிடித்துச் சென்றனர்.
இத்தருணத்தில் மூதாட்டியின் சடலம் சாலையிலேயே கேட்பாரற்று கிடந்த பரிதாபம் அரங்கேறியுள்ளது. சொந்த கிராம மக்களை மூதாட்டியின் சடலத்தை கண்டு கொள்ளாமல், காவல்துறைக்கு கூட தகவல் கொடுக்காமல் டேங்கர் லாரியிலிருந்து கசிந்த டீசலை பிடித்துச் சென்ற சம்பவம் மனிதாபிமனம் குறித்த மிகப்பெரிய கேள்வியை எழுப்பியுள்ளது.
திருவண்ணாமலை அருகே அதிகாலை ஏற்பட்ட டேங்கர் லாரி விபத்தால் திருவண்ணாமலை திண்டிவனம் சாலையில் சிறிது போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையும் படிங்க: போலீஸ் வாகனம் மோதி தூக்கியடிக்கப்பட்ட டூவீலர் ... ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் துடிதுடித்து பலி...!