அடுத்தடுத்து அதிரடி... திருத்தணி கோயிலில் மொட்டை அடிக்க லஞ்சம்..! 4 ஊழியர்கள் சஸ்பெண்ட்..!
திருத்தணி முருகன் கோவிலில் லஞ்சம் பெற்ற 4 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், தமிழகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்களை தினசரி ஈர்க்கும் புனித தலமாக விளங்குகிறது. பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்ற தலைமுடியை காணிக்கையாக செலுத்தும் மொட்டை அடிக்கும் பழக்கம் இங்கு மிகவும் பிரபலமானது.
இந்த சேவையை இலவசமாக வழங்குவதாக கோவில் நிர்வாகம் அறிவித்திருந்த நிலையில், அதை தவறாக பயன்படுத்தி பக்தர்களிடம் பணம் வசூலித்த ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. படாசெட்டி குளம் அருகே அமைந்துள்ள முடி காணிக்கை மையத்தில், நவீன வசதிகளுடன் கூடிய இரண்டடுக்கு கட்டிடம் பக்தர்களின் வசதிக்காக கட்டப்பட்டுள்ளது. சாதாரண நாட்களில் நூற்றுக்கணக்கான பக்தர்களும், விழா நாட்களில் ஆயிரக்கணக்கானோரும் இங்கு வருகை தருகின்றனர்.
கோவில் நிர்வாகம் சார்பில் மொட்டை அடிப்பது இலவசம் என அறிவிக்கப்பட்டிருந்தாலும், சில ஊழியர்கள் ஒரு மொட்டைக்கு ரூ.50 முதல் ரூ.100 வரை கட்டாயம் வசூலித்து வந்ததாக பக்தர்கள் தொடர்ந்து புகார் அளித்தனர். இந்த புகார்களின் அடிப்படையில் கோவில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். முடி காணிக்கை மையத்தில் பணிபுரியும் தினேஷ், வெங்கடேசன், சந்தோஷ் மற்றும் கார்த்திக் ஆகிய நான்கு தற்காலிக ஊழியர்கள் பக்தர்களிடம் பணம் வசூலித்தது உறுதியானது. இதையடுத்து அவர்களை உடனடியாக பணியிடை நீக்கம் செய்து கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த சம்பவம் பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: மேகதாது அணைக்கு சட்டப்பூர்வ தடை..! அரசு பணிக்கு லஞ்சம் கிடையாது... அமைச்சர் நிர்மல் குமார் உறுதி..!
இதே ஆய்வின்போது கோவில் வளாகத்தில் உள்ள கடைகளிலும் திடீர் சோதனை நடத்தப்பட்டது. கோவில் நிர்வாகம் ஆண்டுக்கு ஒருமுறை ஏலம் விடும் இந்த கடைகளில் பஞ்சாமிர்தம், பூஜை பொருட்கள், முருகன் படங்கள் உள்ளிட்டவை விற்கப்படுகின்றன. பக்தர்கள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்லும் பஞ்சாமிர்தம் டப்பாக்களில் தயாரிப்பு தேதி மற்றும் காலாவதி தேதி குறிப்பிடப்படவில்லை என்பதுடன், பல டப்பாக்கள் கெட்டுப்போயிருந்தன. இதையடுத்து சுமார் 100 கிலோ காலாவதியான பஞ்சாமிர்தம், சிப்ஸ், கற்கண்டு உள்ளிட்ட பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதையும் படிங்க: "மீண்டும் சந்திக்கும் வரை"... அதே பாணியில் தயாராகிய பரப்புரை பேருந்து..! எகிறும் எதிர்ப்பார்ப்பு..!!