காங்., கேட்பதில் என்ன தப்பு? ஆட்சி அதிகார பகிர்வு! ஆட்டத்தை ஆரம்பித்தார் திருமாவளவன்!
''எங்களுக்கு இந்த முறை அதிகாரத்தில் பகிர்வு கொடுங்கள் என்று கேட்கிறார்கள். அது ஒன்றும் தவறு கிடையாது'' என காங்கிரஸ் கோரிக்கை குறித்து விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசியலில் திமுக-காங்கிரஸ் கூட்டணியில் ஏற்பட்டுள்ள அதிகாரப் பகிர்வு கோரிக்கை சர்ச்சைக்கு திருமாவளவன் தெளிவான நிலைப்பாட்டை வெளியிட்டுள்ளார். திருச்சியில் நிருபர்களை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், காங்கிரஸ் கோரிக்கை குறித்து பேசினார்.
“காங்கிரஸ் திமுக கூட்டணியில் தான் இருக்கிறது. அதில் எந்த சந்தேகமும் இல்லை. காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால் நேற்று தெளிவாக கூறியுள்ளார். கூட்டணி கட்டுக்கோப்பாக இருக்கிறது.
தேர்தலை ஒன்றாக சந்திக்கிறோம். நாங்களும் இந்த கூட்டணியை உருவாக்குவதிலும், பாதுகாப்பதிலும் அக்கறை கொண்டுள்ளோம். கூட்டணி எந்த வகையிலும் பாதிக்கப்படக் கூடாது என்ற பொறுப்புணர்வில் விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளது” என்று திருமாவளவன் தெரிவித்தார்.
இதையும் படிங்க: திருமாவளவன் முரண்டு புடிச்சா?! விசிகவை இரண்டா உடைங்க?! திமுக போட்ட மாஸ்டர் ப்ளான்! பகீர் திட்டம்!
காங்கிரஸ் ஆட்சியில் அதிகாரப் பகிர்வு கோருவது குறித்து பேசிய அவர், “ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்பது தவறில்லை. தேர்தல் நேரத்தில் கூட்டணி கட்சிகளிடையே சலசலப்பு ஏற்படுவது இயல்பானது. எல்லா கூட்டணிகளிலும் இது நடக்கும். காங்கிரஸ் கூட்டணியில் இருப்பதால் உரிமையோடு கேட்கிறார்கள்.
உங்களுக்கு வெற்றிக்காக நாங்கள் பாடுபட்டோம். இவ்வளவு காலம் உழைத்தோம். எனவே இந்த முறை அதிகாரத்தில் பகிர்வு கொடுங்கள் என்று கேட்பது தவறில்லை” என்று விளக்கினார்.
முதல்வர் ஸ்டாலின் “அதிகாரப் பகிர்வு தமிழக அரசியலுக்கு பொருந்தாது” என்று கூறியது குறித்து பேசிய திருமாவளவன், “அது ஒரு கருத்து. அடுத்த கட்டம் பேச்சுவார்த்தை தான். கோரிக்கை வைப்பதால் கூட்டணி உடைந்து விடாது. காங்கிரஸ் திமுக கூட்டணியில் தான் இருக்கும். எந்த பாதிப்பும் ஏற்படாது.
எங்களைப் போல காங்கிரஸ் நிலைப்பாடு எடுக்க வேண்டும் என்று கட்டாயம் இல்லை. அதேபோல் காங்கிரஸ் சொல்வதை கேட்டு அழுத்தம் கொடுக்கும் நிலையில் நாங்கள் இல்லை” என்றார்.
காங்கிரஸ் கோரிக்கை திமுக கூட்டணியை பலவீனப்படுத்துமா என்பது தற்போது பெரும் விவாதமாக உள்ளது. திருமாவளவன் ஆதரவு கூட்டணியை வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் நெருங்கும் நிலையில் பேச்சுவார்த்தை எப்படி முடிவடையும் என்பது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இதையும் படிங்க: இதமட்டும் பண்ணிடாதீங்க! ஓட்டு பூரா விஜய்க்கு போயிரும்! திமுகவுக்கு திருமாவளவன் கொடுத்த வார்னிங்!