×
 
☰

சாத்தான்குளம் சம்பவத்தில் அதிரடி திருப்பம்... கடத்தப்பட்ட சிறுமிகள் காதலன் வீட்டில் இருந்து மீட்பு... அதிர வைக்கும் பகீர் பின்னணி...!

மகள்கள் காணாமல் போன நிலையில் போலீசாரால் சிறிது நேரத்தில் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சாத்தான்குளம் அருகே அதிகாலையில் வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர் சரமாரியாகத் தாக்குதல் நடத்தியதில் பெண் ஒருவர் உயிரிழந்தார். அவரது கணவரும் மகனும் படுகாயமடைந்தனர். மேலும், இரண்டு மகள்களும் காணாமல் போனதால் பரபரப்பு ஏற்பட்டது.

சாத்தான்குளம் அருகே உள்ள முதலூரைச் சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன். இவரது மனைவி மேரி ரெஜிலா. இந்தத் தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தைகளும் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர்.

இன்று அதிகாலை 2 மணியளவில் இவர்களது வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர் குடும்பத்தினரைச் சரமாரியாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இந்தத் தாக்குதலில் மேரி ரெஜிலா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது கணவர் முத்துகிருஷ்ணனும் மகனும் படுகாயமடைந்தனர்.

இதையும் படிங்க: #BREAKING அதிகாலையில் நேர்ந்த அதி பயங்கரம்... வீடு புகுந்து தாய்க்கு சரமாரி அரிவாள் வெட்டு... 2 பெண் குழந்தைகள் கடத்தல்?

இதற்கிடையே, முத்துகிருஷ்ணன் மற்றும் மேரி ரெஜிலாவின் இரண்டு மகள்களையும் காணவில்லை எனத் தகவல் வெளியானது. இந்தச் சம்பவம் தொடர்பாகச் சாத்தான்குளம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக, சாத்தான்குளத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்ற பிரபாஸ், பரோட்டா மாஸ்டராகப் பணியாற்றி வந்ததாகவும், கொலை செய்யப்பட்ட மேரி ரெஜிலாவின் மூத்த மகளைக் காதலித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதற்கு மேரி ரெஜிலா எதிர்ப்பு தெரிவித்ததுடன், தனது மகள் செல்போனில் பேசுவதையும் கண்டித்துள்ளார். மேலும், கடந்த இரண்டு வாரங்களாக மகளின் செல்போனைப் பயன்படுத்துவதற்குத் தடை விதித்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த பரோட்டா மாஸ்டர், அதிகாலை 2 மணியளவில் வீட்டுக்குள் புகுந்து மேரி ரெஜிலாவைக் கொலை செய்துவிட்டு, தான் காதலித்து வந்த பெண்ணையும் அவரது சகோதரியையும் அழைத்துச் சென்று தனது வீட்டில் வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தத் தகவல் காவல்துறையினருக்குத் தெரியவந்ததைத் தொடர்ந்து, அவர்கள் விரைந்து செயல்பட்டு இரண்டு சிறுமிகளையும் மீட்டுள்ளனர். தற்போது அவர்கள் சாத்தான்குளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், இந்தக் கொலைச் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளைத் தேடுவதற்காக, காவல்துறை அதிகாரிகள் தலைமையில் மொத்தம் நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள பிரகாஷைத் தேடும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

சாத்தான்குளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், மீட்கப்பட்ட இரண்டு சிறுமிகளிடமும் காவல் ஆய்வாளர் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்தச் சம்பவத்தின்போது வேறு யாரேனும் உடனிருந்தார்களா, சம்பவத்தில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் பல்வேறு கட்டங்களாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்தக் கொலைச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: திருச்செந்தூர் முருகன் கோவில் உண்டியலில் நூதன முறையில் திருட்டு? அர்ச்சகர் உட்பட இருவர் கைது!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share