திருடு போன செல்போன்கள்.. குவிந்த புகார்கள்.. அதிரடி காட்டிய போலீசார்..!
தூத்துக்குடி மாவட்டத்தில் திருட்டு போன 11 லட்சம் மதிப்புள்ள 100 செல்ஃபோன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தின் அண்மையில் கொலை, கொள்ளை, செல்போன் பறிப்பு உள்ளிட்ட பல்வேறு குற்ற சம்பவங்கள் அடுத்தடுத்து நடைபெற்றன. பல்வேறு காவல் நிலையங்களில் செல்ஃபோன் காணாமல் போனதாக பெறப்பட்ட புகார்கள் மற்றும் சைபர் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் பதியப்பட்ட வழக்குகள் தொடர்பாக துரிதமான நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி, சைபர் குற்ற பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் சகாய ஜோஸ் மேற்பார்வையில் சைபர் குற்றப்பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் சாந்தி தலைமையிலான சைபர் குற்றப்பிரிவு போலீசார் செல்ஃபோன்கள் எங்கெங்கு உள்ளன என்பதை அதன் ஐ.எம்.இ.ஐ ((IMEI)) எண்ணை வைத்து தொழில்நுட்பரீதியாக விசாரணை மேற்கொண்டு கண்டுபிடித்தனர்.
இதையும் படிங்க: மாணவர்களின் கனவை நிறைவேற்றிய தலைமை ஆசிரியர்.. குவியும் பாராட்டுக்கள்!
இதுகுறித்து சம்மந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு அவர்கள் தெரிவித்த தகவலின் அடிப்படையில் ரூபாய் 11 லட்சம் மதிப்புள்ள 100 செல்ஃபோன்களை போலீசார் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட செல்ஃபோன்களை மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் வைத்து அதன் உரிமையாளர்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் இன்று ஒப்படைத்தார்.
மாவட்டத்தில் 2020ம் ஆண்டு முதல் இதுவரை ரூபாய் 1 கோடி 13 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 1,065 காணாமல் போன செல்ஃபோன்களை தொழில்நுட்ப ரீதியாக விசாரணை மேற்கொண்டு கண்டுபிடித்த சைபர் குற்றப்பிரிவு காவல் நிலைய போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெகுவாக பாராட்டினார்.
இதையும் படிங்க: இழுத்து மூடப்பட்ட கடைகள்; ஆபத்பாந்தவனாக மாறிய அம்மா உணவகங்கள்....!