மதங்களை கடந்த மனிதநேயம்...! கும்பகோணம் மாசி மக திருவிழாவில் பக்தர்களுக்கு இஸ்லாமியர்கள் அன்னதானம்!
கும்பகோணத்தில் மாசி மக தீர்த்தவாரி நிகழ்ச்சிக்கு வரும் பக்தர்களுக்கு இஸ்லாமியர்கள் உணவு வழங்கினர்.
தமிழகத்தின் ஆன்மீக நகரமான கும்பகோணத்தில் உலகப் புகழ்பெற்ற மாசி மகத் திருவிழா இன்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. பல்லாயிரக்கணக்கானப் பக்தர்கள் மகாமகக் குளத்தில் புனித நீராடிய இந்த நன்னாளில், மனிதாபிமானத்தைப் போற்றும் விதமாக இஸ்லாமிய அமைப்புகள் செய்தத் தொண்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
கும்பகோணத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் மாசி மகத் தீர்த்தவாரி நிகழ்ச்சிக்காகத் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவது வழக்கம். அவ்வாறு மகாமகக் குளத்தில் புனித நீராட வந்த பக்தர்களுக்கு, கும்பகோணத்தைச் சேர்ந்த பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் ஒன்றிணைந்து உணவும், குடிநீரும் வழங்கின.
இன்று காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு இஸ்லாமிய இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் உணவுப் பொட்டலங்களையும், குடிநீர் பாட்டில்களையும் இன்முகத்துடன் வழங்கினர். வெயிலின் தாக்கத்தைத் தணிக்க வழங்கப்பட்ட இந்த உதவி, ஜாதி மற்றும் மதங்களைக் கடந்து மனிதநேயமே முதன்மையானது என்பதை உலகிற்குப் பறைசாற்றியது.
இதையும் படிங்க: ரொம்ப கவலையா இருக்கு!! போரை நிறுத்துங்க! கனடா பிரதமர், மோடி கூட்டு வலியுறுத்தல்!
புனித நீராடி விட்டுப் பசியோடு வந்த எங்களுக்கு, சகோதரத்துவத்தோடு இஸ்லாமியப் பெருமக்கள் உணவு வழங்கியது மிகுந்த நெகிழ்ச்சியை அளிக்கிறது. இதுதான் உண்மையானத் தமிழகத்தின் கலாச்சாரம் எனப் பக்தர்கள் நெகிழ்ந்து பாராட்டினர்.
கும்பகோணத்தில் நடைபெறும் பெரியத் திருவிழாக்களின் போது இஸ்லாமிய அமைப்புகள் இதுபோன்றத் தொண்டுகளைத் தொடர்ந்து செய்து வருவது இப்பகுதியின் மத நல்லிணக்கத்திற்குச் சிறந்த உதாரணமாகத் திகழ்கிறது.
மத்தியக் கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் நிலவி வரும் வேளையில், தமிழகத்தின் ஒரு மூலையில் அரங்கேறிய இந்தச் சகோதரத்துவ நிகழ்வு, அமைதி மற்றும் ஒற்றுமையின் செய்தியை உரக்கச் சொல்லியுள்ளது.
இதையும் படிங்க: பிரதமர் வந்தபோது போராட்டத்தை தூண்டி வேடிக்கை பாக்குதா திமுக? கொந்தளித்த நயினார்..!!