திருச்செந்தூர் முருகன் கோயிலில் கட்டண தரிசன நேரம் மாற்றம்! கோயில் நிர்வாகம் அறிவிப்பு!
திருச்செந்தூர் முருகன் கோயிலில் பள்ளியறை பூஜை தாமதத்தைத் தவிர்க்க கட்டண தரிசன நேரத்தில் அதிரடி மாற்றங்களை நிர்வாகம் செய்துள்ளது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்யும் நேரங்களில் திடீர் கட்டுப்பாடுகளையும் மாற்றங்களையும் செய்து திருக்கோயில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழ்க் கடவுள் முருகனின் புகழ்பெற்ற திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்குத் தினமும் ஆயிரக்கணக்கான ஆன்மீக அன்பர்களும், திருவிழா காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்களும் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இதுவரை வழக்கமாக அதிகாலை 5:00 மணிக்குக் கோயில் நடை திறக்கப்பட்டு, ஒன்பது கால பூஜைகள் சிறப்புடன் நடைபெற்று இரவு 9:00 மணிக்கு நடை சாத்தப்பட்டு வந்தது. இந்த தரிசன நேரங்களில், கட்டண தரிசன வரிசையில் இரவு 7:30 மணி வரையிலும், பொது தரிசன வரிசையில் இரவு 8:00 மணி வரையிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வந்தனர்.
இதையும் படிங்க: "திருச்செந்தூர் கோயிலில் தரிசன நேரக் கட்டுப்பாடு!" - பக்தர்கள் அதிர்ச்சி!
இந்நிலையில், தரிசன வரிசைகளில் ஏற்படும் கடுமையான கூட்ட நெரிசல் காரணமாகக் கோயில் நடை சாத்துவதற்கும், இரவு வெகு நேரம் கழித்து நடைபெறும் முக்கியப் பூஜையான பள்ளியறை பூஜை நடப்பதற்கும் தொடர்ச்சியாகக் காலதாமதம் ஏற்பட்டு வந்தது. இந்த நடைமுறைச் சிக்கலைத் தீர்க்கும் பொருட்டுக் கோயில் நிர்வாகம் தரிசன நேரங்களில் தற்போது முக்கிய மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளது.
அதன்படி, இனி கட்டண தரிசன வரிசையில் மாலை 6:30 மணி வரை மட்டுமே பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுவர். அதேபோல, பொது தரிசன வரிசையில் இரவு 7:00 மணி வரை மட்டுமே பக்தர்கள் வரிசையில் செல்ல அனுமதி வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோயில் நடை சாத்தப்படுவதிலும் பள்ளியறை பூஜையிலும் ஏற்படும் தாமதத்தைத் தவிர்க்கவே இந்த புதிய தரிசன நேர மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் திருச்செந்தூர் திருக்கோயில் நிர்வாகம் தெளிவுபடுத்தியுள்ளது. இந்த திடீர் மாற்றத்தால் இரவு நேரத்தில் தாமதமாக வரும் பக்தர்கள் சற்று அதிர்ச்சியடைந்திருந்தாலும், பூஜைகள் தடையின்றி சரியான நேரத்திற்கு நடைபெற இது உதவும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: திருச்செந்தூர் கோவிலில் கிரில் கேட்..! பக்தர்களை திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்... எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் அறிவிப்பு..!