தி. மலையில் அரசு பேருந்தில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு..! சிக்கிய 5 பேர்... தீவிர விசாரணை..!!
திருவண்ணாமலையில் அரசு பேருந்தில் இளைஞரை அரிவாளால் வெட்டிய சம்பவம் தொடர்பாக ஐந்து பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசுப் பேருந்தில் நடந்த கொடூரமான தாக்குதல் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கீழ்பன்னாத்தூர் வட்டம் ஆனந்தல் அருகே உள்ள மதுரம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த 26 வயது இளைஞர் சிவசங்கர், திருப்பூரில் கோழிப் பண்ணையில் பணியாற்றி வருகிறார். முந்தைய நாள் ஏற்கனவே நிலுவையில் இருந்த ஒரு வழக்கில் ஆஜராவதற்காக திருவண்ணாமலைக்கு வந்திருந்த அவர், வழக்கு முடிந்த பிறகு திருப்பூர் திரும்பும் நோக்கில் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து திருப்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் ஏறினார்.
இந்தப் பேருந்து தண்டராம்பட்டு வழியாகச் செல்லும் வழியில் இருந்தது.பேருந்து தண்டராம்பட்டு அருகே உள்ள நாரையூர் கிராமத்தைக் கடந்து புற்று கோவில் பகுதியை அடைந்தபோது, வழக்கம்போல நடத்துநர் கோவிலில் கற்பூரம் வாங்க நிறுத்தினார்.
அப்போதுதான் எதிர்பாராத விதமாக சம்பவம் நடந்தது. பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்த ஐந்து பேர் திடீரென சிவசங்கரைச் சுற்றி வளைத்து, கூர்மையான ஆயுதங்களால் அவரை மிகவும் கொடூரமாக வெட்டித் தாக்கினர். தாக்குதலில் சிவசங்கர் கடுமையாகக் காயமடைந்து ரத்த வெள்ளத்தில் மிதக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.சம்பவத்தைக் கண்ட பயணிகளும் அருகில் இருந்தவர்களும் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக 108 ஆம்புலன்ஸுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: வங்கதேசம் திரும்பினால் கைது! ஷேக் ஹசீனாவுக்கு புதிய சிக்கல்!! அமைச்சர் விடுத்த கடும் எச்சரிக்கை!
சிவசங்கர் ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உயிருக்கு ஆபத்துள்ள நிலையில் சிகிச்சை தொடர்கிறது.சம்பவம் நடந்த பகுதியில் பதற்றம் நிலவியது. அருகிலிருந்த மற்றொரு பேருந்தில் இருந்தவர்கள் கூட அச்சத்துடன் ஓடியதாகக் கூறப்படுகிறது. இந்தத் தாக்குதல் ஏற்கனவே சிவசங்கருக்கு ஒரு பெண்ணுடன் இருந்த உறவு தொடர்பான பிரச்சினையின் தொடர்ச்சியாக இருக்கலாம் என்று காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. இளைஞரை வெட்டிய விவகாரத்தில் 5 பேர் சிக்கியுள்ளனர். ஐந்து பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை காரணம், மூளையாக செயல்படுவது யார் என பல கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: #BREAKING: டாஸ்மாக் முறைகேடு.! செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமின்..! கிரீன் சிக்னல் காட்டிய சுப்ரீம் கோர்ட்..!!