மருமகன் வேணுமா? கட்சி வேணுமா? மம்தாவுக்கு எதிராக போர்க்கொடி! திரிணாமுல் எம்.பிக்கள் 19 பேர் அதிருப்தி!
திரிணமுல் காங்கிரஸின் அதிருப்தி லோக்சபா எம்.பி.க்கள் 20 பேரில் 19 பேரின் பெயர்ப் பட்டியல் இறுதியாக வெளியாகியுள்ளது.
மேற்கு வங்க அரசியலில் திரிணமுல் காங்கிரஸ் கட்சிக்குள் புதிய அரசியல் பரபரப்பு உருவாகியுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் கட்சி சந்தித்த தோல்விக்குப் பிறகு, கட்சித் தலைவர் மற்றும் முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜி மீது உட்கட்சித் அழுத்தம் அதிகரித்து வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
15 ஆண்டுகளாக மாநில அரசியலில் ஆதிக்கம் செலுத்திய திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி முடிவுக்கு வந்ததையடுத்து, கட்சிக்குள் அதிருப்தி குரல்கள் அதிகரித்துள்ளன. ஏற்கனவே சில முக்கிய தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ள நிலையில், தற்போது அதிருப்தியில் உள்ளதாகக் கூறப்படும் 20 லோக்சபா எம்.பி.க்களில் 19 பேரின் பெயர்கள் வெளியாகியிருப்பது அரசியல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இந்த அதிருப்திக் குழுவில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யூசுப் பதான் மற்றும் நடிகையும் அரசியல்வாதியுமான சாயோனி கோஷ் ஆகியோரின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன. இக்குழு சார்பில் சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் அனுப்பப்பட்டதாகவும், அதில் 19 எம்.பி.க்கள் கையெழுத்திட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: மம்தா பானர்ஜி - சோனியாகாந்தி சந்திப்பு! காங்., உடன் இணைகிறதா திரிணாமுல் காங்.,?!
கட்சியின் மூத்த தலைவர் ககோலி கோஷ் தஸ்திதார் தலைமையிலான இந்தக் குழுவில் சதாப்தி ராய், பாபி ஹல்தார், ஷர்மிலா சர்க்கார், ஷர்மிலா பந்த்யோபாத்யாய், ஜகதீஷ் பர்மா பசூனியா, அசித் குமார் மால், அருப் சக்ரவர்த்தி, ரச்னா பானர்ஜி, சாயோனி கோஷ், கலிலூர் ரஹ்மான், அபு தாஹிர் கான், யூசுப் பதான், மிட்டாலி பெய்க், மாலா ராய், காளிபாத சோரன், தீபக் அதிகாரி, ஜூன் மாலியா மற்றும் பார்த்தா பௌமிக் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
லோக்சபாவில் திரிணமுல் காங்கிரஸ் தற்போது முக்கிய எதிர்க்கட்சிகளில் ஒன்றாக இருக்கும் நிலையில், இந்த அதிருப்தி அணி கட்சியின் எதிர்கால அரசியல் பாதையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். அதே நேரத்தில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணையாமல், வெளிப்புற ஆதரவு அளிக்கும் நிலைப்பாட்டை இந்த எம்.பி.க்கள் எடுத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் மேற்கு வங்க அரசியலிலும், தேசிய அரசியலிலும் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
இதையும் படிங்க: இரண்டாக உடைகிறது திரிணாமுல் காங்.,! மகாராஷ்டிரா மாடலை கையில் எடுத்த பாஜக! மம்தா கண்ணீர்!