தமிழக சட்டசபை கூட்டத்தின் 2வது நாள்..!! முக்கிய மசோதாவை தாக்கல் செய்கிறார் முதல்வர் ஸ்டாலின்..!!
தமிழக சட்டசபை கூட்டத்தின் இரண்டாவது நாளான இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முக்கிய மசோதாவை தாக்கல் செய்கிறார்.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம், கோல்ட்ரிஃப் இருமல் மருந்து விவகாரம், கிட்னி திருட்டு வழக்கு உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகளின் நிழலில் தமிழக சட்டமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் நேற்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. நான்கு நாட்கள் நீடிக்கும் இந்த கூட்டத்தில், அரசியல் கட்சிகளிடையே கடும் மோதல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடைபெற்ற முதல் நாள் கூட்டத்தில், பாரம்பரியமாக திருக்குறள் பாராயணத்துடன் தொடங்கிய பேரவை, இரங்கல் தீர்மானங்களுடன் நிறைவடைந்தது.
கூட்டத்தின் தொடக்கத்தில், வால்பாறை எம்எல்ஏ டி.கே. அமுல் கந்தசாமி, மற்றும் எட்டு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரின் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. குறிப்பாக, கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்த 41 பேருக்கு சட்டமன்றம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தது. சபாநாயகர் அப்பாவு, "இந்தப் பேரழிவுக்கு குடும்பங்கள் தாங்க முடியாத துக்கத்தில் இருக்கின்றன. அரசு உதவிகளை விரிவாக்கியுள்ளது" என்று கூறினார்.
இதையும் படிங்க: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி மீது செருப்பு வீச முயற்சி.. முதல்வர் மு.க ஸ்டாலின் கடும் கண்டனம்..!!
இரங்கல் வாசிப்பில் புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டது. ஒவ்வொரு உறுப்பினரும் குறுகிய கால உரையாடலுடன் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. இருப்பினும், கூட்டத்தின் முன்பேயே அரசியல் பரபரப்பு உச்சத்தில் இருந்தது. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான எதிர்க்கட்சி உறுப்பினர்கள், கரூர் சம்பவத்தில் அரசின் பொறுப்பின்மை குறித்து 'கவனத்துக்கு அழைப்பு' தீர்மானத்தை சமர்ப்பிக்க தயாராக இருந்தனர். அரசின் அலட்சியத்தால் 41 உயிர்கள் போயின. சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டாக வலியுறுத்தினர். இந்த தீர்மானம் ஏற்கப்படாவிட்டால், பேரவையில் ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என்று எச்சரித்தனர்.
இதனைத்தொடர்ந்து அனைவரும் மவுன அஞ்சலி செலுத்தியதும் நேற்றைய கூட்டம் இத்துடன் ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். அத்துடன் கூட்டம் நிறைவடைந்து. இந்நிலையில் இன்று (புதன்கிழமை), 2025-2026-ம் ஆண்டின் கூடுதல் செலவுக்கான மானியக்கோரிக்கைகள் பேரவையில் அளிக்கப்படுகிறது. காலை 9.30 மணிக்கு கூட்டம் தொடங்கியதும் முதலில் கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்பட இருக்கிறது. கேள்வி நேரம் முடிந்ததும் 2025-2026-ம் ஆண்டின் கூடுதல் செலவுக்கான மானியக்கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறுகிறது.
இதனிடையே சட்டசபை கூட்டத்தொடரில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மசோதா தாக்கல் செய்வது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று அவசர ஆலோசனை நடத்தினார். அவரது இல்லத்தில் நடைபெற்ற ஆலோசனையில் என்.ஆர்.இளங்கோ உள்ளிட்ட மூத்த வழக்கறிஞர்கள் பங்கேற்றனர். அரசியல் கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய மசோதா நடப்பு கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. இதேபோல் மற்ற முக்கிய மசோதாக்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.
இதையும் படிங்க: நாளை ராமநாதபுரம் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்.. 2 நாட்களுக்கு இது 'NO'.. போலீஸ் ஸ்ட்ரிக்ட் உத்தரவு..!!