×
 

இடைத்தேர்தல் களம் தீவிரம்: டாக்டர் கிருஷ்ணசாமியை நேரில் சந்தித்து ஆதரவு கேட்ட அதிமுக மூத்த தலைவர்கள்!

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு கோரிப் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமியை அதிமுக முன்னாள் அமைச்சர்கள் நேரில் சந்தித்தனர்.

அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெறவுள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு முழு ஆதரவு அளிக்க வேண்டும் எனக் கோரி, புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் க. கிருஷ்ணசாமியை அதிமுகவின் மூத்த நிர்வாகிகளும் முன்னாள் அமைச்சர்களுமான கே.பி. முனுசாமி, ஓ.எஸ். மணியன், அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் நேரில் சந்தித்து முறைப்படி ஆதரவுக் கடிதத்தை வழங்கியுள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தின் மதுராந்தகம் மற்றும் திருப்பூர் மாவட்டத்தின் தாராபுரம் ஆகிய இரு தனித் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் களம் நாளுக்கு நாள் அனல் பறந்து வருகிறது. இத்தேர்தலில் ஆளும் தவெக, திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் தனித்துப் போட்டியிடும் இடதுசாரி கம்யூனிஸ்ட் கட்சிகள் என ஐந்துமுனைப் போட்டி உறுதியாகியுள்ள சூழலில், ஒவ்வொரு வாக்குகளையும் அறுவடை செய்ய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணி தீவிர களப்பணிகளை முடுக்கிவிட்டுள்ளது.

குறிப்பாக, தலித் மற்றும் பட்டியலின வாக்கு வங்கிகளைக் கணிசமாகக் கொண்டுள்ள இத்தொகுதிகளில் புதிய தமிழகம் கட்சியின் நிலைப்பாடு தேர்தல் முடிவுகளில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால், அக்கட்சியின் ஆதரவைப் பெற அதிமுக தலைமை முடிவு செய்தது. அதன்படி, சென்னை தி.நகரில் உள்ள புதிய தமிழகம் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்த அதிமுக துணைப் பொதுச்செயலாளர் கே.பி. முனுசாமி, அமைப்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஓ.எஸ். மணியன், முன்னாள் அமைச்சர் அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் அடங்கிய உயர்மட்டக் குழுவினர் டாக்டர் கிருஷ்ணசாமியை நேரில் சந்தித்துப் பொன்னாடை அணிவித்து நலம் விசாரித்தனர்.

இதையும் படிங்க: மீனவர்களை எதிர்த்து தலைமைச் செயலகம் கட்டினால், அது மீண்டும் மருத்துவமனையாகத்தான் மாறும்! ஜெயக்குமார் எச்சரிக்கை!

தொடர்ந்து, மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் நிறுத்தப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ வேட்பாளர்களுக்குப் புதிய தமிழகம் கட்சி தனது முழுமையான ஆதரவை வழங்கி களப்பணியாற்ற வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி சார்பில் எழுதப்பட்ட அதிகாரப்பூர்வ ஆதரவுக் கடிதத்தை அவரிடம் வழங்கினர். இச்சந்திப்பின் போது தற்போதைய தேர்தல் கள நிலவரங்கள், தொகுதிப் பிரச்சினைகள் மற்றும் வாக்குச் சேகரிப்பு வியூகங்கள் குறித்து இருதரப்பிலும் விரிவான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதிமுகவின் ஆதரவுக் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு டாக்டர் கிருஷ்ணசாமி விரைவில் தனது அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: ரீல்ஸ் அரசியலில் இருந்து தமிழகத்தை விடுவிப்போம்! அண்ணாயிசம் ஆட்சியை மீண்டும் நிறுவுவோம்! இபிஎஸ் சபதம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share