தமிழ்நாட்டில் புதிய படங்களுக்கு தினசரி 5 காட்சிகள் திரையிட அனுமதி! முதலமைச்சர் விஜய் அரசாணை வெளியீடு!
புதிய திரைப்படங்கள் வெளியாகி ஒரு வாரத்திற்கு மற்றும் விடுமுறை நாட்களில் தினசரி 5 காட்சிகள் திரையிட அனுமதியளித்து முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் புதிய திரைப்படங்கள் வெளியாகும் முதல் ஒரு வாரத்திற்குத் திரையரங்குகளில் தினசரி 5 காட்சிகள் திரையிட அனுமதியளித்து முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று அரசாணை வெளியிட்டு உத்தரவிட்டுள்ளார். சினிமா துறையினரின் நீண்ட நாள் தார்மீகக் கோரிக்கையை ஏற்று, விதிகளில் திருத்தம் செய்து பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த அதிரடி உத்தரவு கோலிவுட் தயாரிப்பாளர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
கடந்த மே 16 அன்று திரைப்படத் துறையைச் சேர்ந்த பல்வேறு முக்கியப் பிரமுகர்கள் முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்களை நேரில் சந்தித்துத் தங்களது கோரிக்கைகளை முன்வைத்தனர். அதில், தமிழ்நாட்டிலுள்ள திரையரங்குகளில் அனைத்துத் திரைப்படங்களையும் நாளொன்றுக்கு ஐந்து காட்சிகள் திரையிட அனுமதியளிக்கும்படி முக்கியமாகக் கோரியிருந்தனர். இதுவரை, 1957-ஆம் ஆண்டு தமிழ்நாடு திரையரங்குகள் (ஒழுங்குமுறை) விதியின் கீழ், 'C' படிவ உரிம நிபந்தனை 14-A-இன் படி, அனைத்துத் திரையரங்குகளிலும் தினசரி நான்கு காட்சிகள் மட்டுமே திரையிடப்பட்டு வந்தன. பண்டிகை மற்றும் பொது விடுமுறை நாட்களில் கூடுதலாக ஒரு சிறப்புக் காட்சிக்கு மாவட்ட ஆட்சியர் அல்லது சென்னை மாநகரக் காவல் ஆணையரின் அனுமதியைத் தனியாகப் பெற வேண்டிய நடைமுறை இருந்தது.
திரைப்படத் துறையினரின் கோரிக்கையைக் கனிவோடு பரிசீலித்த முதலமைச்சர், விதிகளில் திருத்தம் மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார். அதன்படி வெளியிடப்பட்டுள்ள புதிய செய்தி வெளியீட்டின் முக்கிய விவரங்கள். தமிழ்நாட்டிலுள்ள அனைத்துத் திரையரங்குகளிலும், புதிய தமிழ்த் திரைப்படங்கள் வெளியிடப்படும் நாளிலிருந்து முதல் ஏழு நாட்களுக்கு தினசரி ஐந்து காட்சிகள் திரையிடலாம். உள்ளூர் பண்டிகை நாட்கள், பொது விடுமுறை நாட்கள், சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் தினசரி ஐந்து காட்சிகள் திரையிட அனுமதியளிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட புதிய விதிமுறைகளின்படி ஐந்து காட்சிகள் திரையிடுவதற்கு அரசு அல்லது உரிமம் வழங்கும் அலுவலரின் (மாவட்ட ஆட்சியர் / காவல் ஆணையர்) அனுமதியைத் தனியாகப் பெறத் தேவையில்லை.
இதையும் படிங்க: விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி! ரூ.50,000 வரை பயிர்க்கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு 100% தள்ளுபடி செய்த முதல்வர் விஜய்!
புதிய அரசாங்கத்தின் இந்த அதிரடி விதிகளின் திருத்தம் காரணமாக, திரைப்படத் தயாரிப்பாளர்கள் தங்களது இமாலய முதலீட்டை முதல் ஒரு வாரத்திலேயே பெருமளவில் மீட்டெடுக்க இந்த ஐந்து காட்சிகள் வழிவகை செய்யும். மேலும், வார இறுதி நாட்களிலும், பண்டிகை தினங்களிலும் தனியாக அனுமதி கேட்டு அரசு அலுவலகங்களுக்கு அலைவதைத் தடுத்து, எவ்விதத் தடையுமின்றிச் சிறப்புக் காட்சிகளைத் திரையரங்கினர் திரையிட முடியும். கோலிவுட்டின் பொருளாதார வர்த்தகத்தை டாப் கியருக்குக் கொண்டு செல்லும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க உத்தரவு, ஒட்டுமொத்தத் திரையுலகிற்கும் புதிய உத்வேகத்தைத் தந்துள்ளது.
இதையும் படிங்க: மேகதாது அணை விவகாரம்! ஆக்ஷனில் இறங்கிய முதல்வர் விஜய்!! சட்ட நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள உத்தரவு!