புது பொலிவுடன் அம்மா உணவகங்கள்! முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு! டி.டி.வி.தினகரன் வரவேற்பு!
அம்மா உணவகங்களை புதுப்பித்துத் தரமான உணவு வழங்கும் உத்தரவை மனதார வரவேற்கிறேன் அதே நேரத்தில் அனைத்து ஊராட்சிகளுக்கும் விரிவாக்கம் செய்ய வேண்டும் என டி.டி.வி தினகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களின் பசிப்பிணியைப் போக்கும் உன்னதத் திட்டமான அம்மா உணவகங்களை முழுமையாகப் புதுப்பித்து, அங்கு சுவையான மற்றும் தரமான உணவுகளைத் தங்கு தடையின்றி வழங்கத் தமிழக முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு ஏழைகளின் நலன் சார்ந்து எடுக்கப்பட்டுள்ள இந்த அதிரடி நடவடிக்கை பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
தமிழகத்தில் தற்போது பெருநகர சென்னை மாநகராட்சி மூலம் 383 அம்மா உணவகங்களும், மற்ற மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகள் மூலமாக 237 அம்மா உணவகங்களும் என மொத்தம் 620-க்கும் மேற்பட்ட உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், சமீப காலங்களாக இந்த உணவகங்களில் வழங்கப்படும் உணவு வகைகளின் தரம் மற்றும் சுவை திருப்திகரமாக இல்லை என்று முதலமைச்சர் விஜய்யின் கவனத்திற்குப் புகார்கள் கொண்டு செல்லப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, உரிய அரசுத் துறைச் செயலாளர்களுடன் அவசரக் ஆலோசனை மேற்கொண்ட முதலமைச்சர் விஜய், அம்மா உணவகங்களுக்குத் தேவைப்படும் உள்கட்டமைப்பு வசதிகளை உடனடியாக மேம்படுத்தவும், பழுதடைந்த சமையல் உபகரணங்களை மாற்றி புதிய உபகரணங்களைக் கொள்முதல் செய்யவும் ஆணையிட்டார்.
இதையும் படிங்க: மக்களின் வரப்பிரசாதம் அம்மா உணவகம்..!! தரம் உயர்த்த முதலமைச்சர் ஜோசப் விஜய் அதிரடி உத்தரவு..!!
ஏழை எளிய மக்களுக்கு வரப்பிரசாதமாகத் திகழும் அம்மா உணவகங்களை மேம்படுத்த முதலமைச்சர் விஜய் பிறப்பித்திருக்கும் இந்த உத்தரவை அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் திரு. டி.டி.வி தினகரன் அவர்கள் மனமார வரவேற்றுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மனிதர்கள் உயிர்வாழ அடிப்படைத் தேவையான உணவை, லட்சக்கணக்கான ஏழைத் தொழிலாளர்களுக்கு வழங்கி வந்த அட்சயப்பாத்திரமான அம்மா உணவகங்கள், கடந்த ஐந்தாண்டு கால திமுக ஆட்சியில் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் சிதைக்கப்பட்டு முடக்கி வைக்கப்பட்டிருந்தன.
தற்போது புதியதாக ஆட்சிப்பொழும்பிற்கு வந்திருக்கும் முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள், இதன் அவசியத்தை உணர்ந்து சீரமைக்க உத்தரவிட்டிருப்பது பாராட்டுக்குரியது என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்தத் திட்டத்தை இன்னும் விரிவாக்கம் செய்து, தமிழகத்தின் அனைத்து ஊராட்சிகளிலும் அம்மா உணவகங்களைத் திறந்து ஏழைத் தொழிலாளர்களின் பசியைப் போக்கிட உதவிட வேண்டும் என்றும் அவர் முதலமைச்சருக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: கடும் GAS பிரச்சனை..! அம்மா உணவகங்களில் இட்லி, சப்பாத்தி நிறுத்தம்..! முக்கிய அறிவிப்பு..!