×
 

“வன்முறையை தூண்டினால் எக்ஸ் தளம் மீது நடவடிக்கை!” - தமிழக சைபர் கிரைம் போலீஸ் அதிரடி!

வன்முறையைத் தூண்டும் வகையில் வீடியோக்களைப் பதிவிட்ட 22 'எக்ஸ்' பக்கங்களை முடக்க தமிழக சைபர் கிரைம் போலீஸ் உத்தரவிட்டுள்ளது.

திருத்தணியில் வடமாநில வாலிபர் தாக்கப்பட்ட வீடியோவை வைத்து வன்முறையைத் தூண்டும் வகையில் பதிவிட்ட 22 எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கங்களை முடக்கக் கோரி, தமிழகச் சைபர் கிரைம் காவல்துறை எக்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்திற்கு அதிகாரப்பூர்வமாகப் பரிந்துரைக் கடிதம் அனுப்பியுள்ளது.

இந்த விவகாரத்தில் எக்ஸ் நிறுவனம் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறினால், நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அந்த நிறுவனத்தின் மீதே சட்டப்பூர்வமான ‘ஆக்ஷன்’ எடுக்கப்படும் எனத் தமிழகச் சைபர் கிரைம் டிஜிபி சந்தீப் மிட்டல் எச்சரிக்கை விடுத்துள்ளார். திருத்தணியில் ஒடிசா மாநில வாலிபர் தாக்கப்பட்ட சம்பவத்தைத் தவறாகச் சித்தரித்து, பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையிலும், வடமாநிலத் தொழிலாளர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையிலும் சில பக்கங்கள் தொடர்ந்து பதிவிட்டு வருவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் சட்டம் ஒழுங்கு பாதிப்பு ஏற்படுவதைத் தவிர்க்கும் பொருட்டு, தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் இந்த அதிரடி நடவடிக்கையைத் தமிழகக் காவல்துறை மேற்கொண்டுள்ளது.

திருத்தணி ரயில் நிலையத்தில் ஒடிசாவைச் சேர்ந்த சூரஜ் என்ற வாலிபரை, 17 வயதுடைய நான்கு சிறுவர்கள் பட்டாக்கத்தியால் தாக்கி அதனை ‘ரீல்ஸ்’ வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். இந்தச் சம்பவம் தொடர்பாகத் திருவள்ளூர் மாவட்டக் காவல்துறை உடனடியாக வழக்குப் பதிவு செய்து, சம்பந்தப்பட்ட நான்கு பேரையும் கைது செய்து செங்கல்பட்டு சிறார் காப்பகத்தில் அடைத்துள்ளது. காயம் அடைந்த சூரஜ், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுப் பின்னர் தனது சொந்த விருப்பத்தின் பேரில் ஊருக்குத் திரும்பியுள்ளார். இருப்பினும், இந்த வீடியோவைச் சமூக வலைதளங்களில் பகிரும் சில பக்கங்கள், வடமாநிலத் தொழிலாளர்கள் திட்டமிட்டுத் தாக்கப்படுவதாக அவதூறு செய்திகளைப் பரப்பி வருகின்றன.

இதையும் படிங்க: ரயிலில் இருந்து மாயமான புதுப்பெண்.. தேடிப்போன போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

சமூக வலைதளங்களில் பரவும் இத்தகைய சர்ச்சைக்குரிய கருத்துகள் பொதுமக்களிடையே தேவையற்ற பீதியையும், வன்முறையையும் தூண்டும் வகையில் அமைந்துள்ளதாகத் தமிழகச் சைபர் கிரைம் காவல்துறை கருதுகிறது. இது தொடர்பாக எக்ஸ் (X) நிறுவனத்திற்குத் தமிழகச் சைபர் கிரைம் டிஜிபி சந்தீப் மிட்டல் அனுப்பியுள்ள கடிதத்தில், “திருவள்ளூர் மாவட்டக் காவல் விசாரணை அதிகாரியின் வேண்டுகோளின் அடிப்படையில், வன்முறையைத் தூண்டும் 22 எக்ஸ் பக்கங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன” எனத் தெரிவித்துள்ளார். இந்தப் பதிவுகள் இளைஞர்களைத் தவறான பாதைக்கு இட்டுச் செல்வதுடன், தமிழகத்தின் பொது அமைதிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக விளங்குவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் (IT Act) கீழ், பொது அமைதிக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் இத்தகைய 22 பக்கங்களின் இணைப்புகளையும் (Links) முடக்க வேண்டும் என டிஜிபி சந்தீப் மிட்டல் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார். மேலும், மதுரை உயர்நீதிமன்றக் கிளையின் முந்தைய உத்தரவுகளை மேற்கோள் காட்டி, எக்ஸ் நிறுவனம் இந்தப் பக்கங்களை முடக்கத் தவறினால் அந்த நிறுவனத்தின் மீது கடுமையான சட்டப்பூர்வ நடவடிக்கைகள் பாயும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. போலிச் செய்திகள் மற்றும் வன்முறை வீடியோக்களைப் பரப்புவோர் மீது சைபர் கிரைம் போலீஸார் தொடர்ந்து ‘கழுகுப் பார்வை’ வைத்து வருவதால், பொதுமக்கள் இத்தகைய பதிவுகளைப் பகிர வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இதையும் படிங்க: கோவா நைட் கிளப் தீ விபத்து சம்பவம்..!! 4 பேர் அதிரடி கைது..!! ஓனருக்கு பறந்த வாரண்ட்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share