தமிழகத்தில் அரியணை ஏறப்போவது யார்..?? உச்சக்கட்ட பரபரப்புடன் வாக்குகள் எண்ணும் பணி தீவிரம்..!!
மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் பலத்த பாதுகாப்புடன் எண்ணப்பட உள்ளன.
தமிழகத்தில் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு ஆட்சி அமைக்கப் போவது யார் என்பதைத் தீர்மானிக்கும் மகத்தான சட்டமன்றத் தேர்தல் கடந்த மாதம் 23-ம் தேதி அமைதியான முறையில் நடைபெற்றது. மொத்தம் 75,064 வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்தத் தேர்தலில் சாதனை படைக்கும் விதமாக 85.10 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. சில தொகுதிகளில் வாக்குப்பதிவு 90 சதவீதத்தைத் தாண்டியது குறிப்பிடத்தக்கது.
மொத்தம் 4 கோடியே 87 லட்சத்து 98 ஆயிரத்து 833 வாக்காளர்கள் உள்ள நிலையில், பெண்கள் அதிக ஆர்வத்துடன் வாக்களித்துள்ளனர். 2 கோடியே 52 லட்சத்து 59 ஆயிரத்து 596 பெண்கள், 2 கோடியே 35 லட்சத்து 34 ஆயிரத்து 720 ஆண்கள் மற்றும் 4,517 திருநங்கைகள் உள்பட பெரும் எண்ணிக்கையில் மக்கள் ஓட்டுப் போட்டுள்ளனர். இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களின் பங்கேற்பு இம்முறை வரலாற்றில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது.
முதல் முறை வாக்காளர்கள் உட்பட இளம் தலைமுறையினர் தங்கள் விருப்பக் கட்சிகளுக்கு தவறாமல் வாக்குகளைப் பதிவு செய்துள்ளனர். இதனால் இளைஞர் வாக்குகள் இந்தத் தேர்தலின் திசையை நிர்ணயிக்கும் முக்கிய அம்சமாகக் கருதப்படுகிறது. திமுக தலைமையிலான கூட்டணி, அதிமுக தலைமையிலான அணி, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக), சீமானின் நாம் தமிழர் கட்சி உள்ளிட்டவை தீவிரமாகப் போட்டியிட்டன. முதன்முறையாகத் தேர்தல் களத்தில் இறங்கிய விஜய்யின் தவெக பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என கருத்துக் கணிப்புகள் தெரிவித்திருந்தன.
இதையும் படிங்க: மேற்கு வங்கத்தில் முதற்கட்ட வாக்குப்பதிவு விறுவிறு..!! ஆர்வத்துடன் வாக்களிக்கும் மக்கள்..!!
மொத்தம் 4,023 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். இதில் 3,579 ஆண்கள், 443 பெண்கள் மற்றும் ஒரு திருநங்கை வேட்பாளர் அடங்குவர்.கடந்த பத்து நாட்களாக யார் ஆட்சி அமைப்பார் என்பது குறித்த எதிர்பார்ப்பு தமிழகம் முழுவதும் உச்சமடைந்திருந்தது. அந்த எதிர்பார்ப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. 234 தொகுதிகளுக்கும் தனித்தனி அறைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும்.
பின்னர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் (EVM) பதிவான வாக்குகள் எண்ணப்படும். இதற்காக 240 அறைகள் மற்றும் 3,324 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளன.வாக்கு எண்ணிக்கைப் பணிக்காக 10,545 ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு பார்வையாளரும், மொத்தம் 4,624 நுண் பார்வையாளர்களும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நடைபெறும் இந்த வாக்கு எண்ணிக்கையின் முடிவுகள் மாலைக்குள் பெரும்பாலான தொகுதிகளில் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தின் அடுத்த ஆட்சியாளர் யார் என்பதை இன்று மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
இதையும் படிங்க: இன்னைக்கு இல்ல..! விஜயின் வேளாங்கண்ணி, நாகூர் பயணம் ரத்து..! தொண்டர்கள் ஏமாற்றம்.!!