×
 
☰

மூடி மறைக்கப்படும் அரசாணைகள், நியமனங்கள்!! கேள்விக்குறியாகும் தூய ஆட்சியின் வெளிப்படைத் தன்மை!

தவெக ஆட்சி வெளிப்படைத் தன்மையுடன் நடக்கும் என முதல்வர் விஜய் தொடர்ந்து கூறி வருகிறார். ஆனால் அரசு நியமனங்கள், அரசாணைகள் உள்ளிட்ட எதிலும் வெளிப்படைத் தன்மையே இல்லை என்று கூறப்படுகிறது

தமிழக அரசுத் துறைகள் சார்பாகப் பிறப்பிக்கப்படும் அரசாணைகளை முறையாக வெளியிடாமல் மறைப்பதால் வெளிப்படைத்தன்மை கேள்விக்குறியாகி இருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தவெக ஆட்சி வெளிப்படைத் தன்மையுடன் நடக்கும் என முதல்வர் விஜய் தொடர்ந்து கூறி வருகிறார். ஆனால் அரசு நியமனங்கள், அரசாணைகள் உள்ளிட்ட எதிலும் வெளிப்படைத் தன்மையே இல்லை என்று கூறப்படுகிறது.

தலைமைச் செயலக வட்டாரங்கள் கூறியதாவது: தமிழக அரசில் மொத்தம் 42 துறைகளும் நூற்றுக்கும் அதிகமான இயக்குனரகங்களும் ஆணையரகங்களும் உள்ளன. அரசின் நிர்வாகப் பணிகள், திட்டங்கள், அறிவிப்புகள் தொடர்பான அரசாணைகளைத் துறையின் செயலர்களான ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் வெளியிடுவர்.

இதையும் படிங்க: உள்ளாட்சி தேர்தல் வெற்றிக்கு விஜய் முகம் மட்டும் பத்தாது?! தவெக போடும் மாற்றுக் கணக்கு! புது ஸ்கெட்ச்!

அந்த வகையில் ஒரு நாளைக்குச் சராசரியாக 20 முதல் 30 அரசாணைகள் வெளியாகும். இவற்றைப் பொதுமக்கள், ஊடகங்கள், அரசு அலுவலர்கள் கவனத்துக்குக் கொண்டு செல்ல செய்தித்துறை வாயிலாக அரசு இணையதளத்தில் வெளியிட வேண்டும்.

ஆனால் கடந்த ஆட்சிகளைப் போலவே தவெக அரசும் அரசாணைகளைத் திட்டமிட்டு மறைக்கிறது. எதை வெளியிட்டால் அரசுக்குச் சிக்கல் வராதோ, விளம்பரம் வருமோ அவை மட்டுமே செய்தித்துறை வாயிலாக வெளியாகின்றன. குறிப்பாக சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்கான அரசாணையைப் பொதுத்துறை இன்று வரை வெளியிடவில்லை. அதேபோல நிறுத்தப்பட்ட லிமிடெட் டெண்டர் முறையை மீண்டும் தொடங்குவதற்கான அரசாணையை நெடுஞ்சாலைத் துறை வெளியிடவில்லை.

அரசாணைகள் மறைக்கப்படுவது ஒருவகை என்றால் பல நாட்களுக்குப் பின் வெளியிடுவது வேறு வகை. உதாரணமாக மழைநீர் சேமிப்பு தொடர்பாகக் கடந்த 16ம் தேதி ஒரு அரசாணையை நகராட்சி நிர்வாகத் துறை தயார் செய்தது. ஆனால் அந்த அரசாணை 19ம் தேதிதான் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. முதல்வர் கவனிக்கும் துறையின் நிலைமையே இப்படித்தான் உள்ளது. அரசாணை விவகாரத்தில் இப்படியென்றால் அரசின் நியமனப் பதவிகளிலும் வெளிப்படைத் தன்மை இல்லை.

முதல்வரின் அரசியல் பிரிவு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட ரிக்கி ரத்தன் பண்டித் வெற்றிவேலின் நியமனம் செய்தித்துறை மூலம் வெளியிடப்படாமல் கடந்த மே 12ம் தேதி கசியவிடப்பட்டது. எதிர்ப்பு கிளம்பியதால் அது ரத்து செய்யப்படுவதாகச் செய்தித்துறை அறிவிப்பு வெளியிட்டது.

இருப்பினும் அதே நாளில் முதல்வரின் தனிச் செயலராக நியமிக்கப்பட்ட ஜெகதீஷின் நியமனம் குறித்த அறிவிப்பு இன்று வரை வெளியிடப்படவில்லை. அத்துடன் முதல்வரின் ஆலோசகர்களாக ஜான் ஆரோக்கியசாமி, விஷ்ணு ரெட்டி ஆகியோர் நியமிக்கப்பட்டதற்கான ஆணைகளும் இன்று வரை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.

முக்கியமான விவகாரங்களில் ஒரு செய்தியைக் கசியவிட்டு முதலில் ஆழம் பார்க்கின்றனர். அதற்கு எதிர்ப்பு வரவில்லை என்றால் மட்டுமே அதிகாரப்பூர்வ அறிவிப்பு வருகிறது. எதிர்ப்பு கிளம்பினால் அரசாணை, நியமனங்களை மறைத்துவிடுகின்றனர். இதை ஒரு வியூகமாகவே தவெக அரசு தொடர்ந்து செய்கிறது என அந்த வட்டாரங்கள் கூறின.

இதையும் படிங்க: ஆப்பிரிக்காவாக மாறுகிறதா தமிழ்நாடு?... தவெக அரசுக்கு ஆர்.பி. உதயகுமார் கொடுத்த அதிர்ச்சி வைத்தியம்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share