கூட்டுறவு நகை கடன் அதிரடி உயர்வு: கிராமுக்கு ரூ.10,000 கடன்! தமிழக அரசு அறிவிப்பு!
கூட்டுறவு நிறுவனங்களில் வழங்கப்படும் தங்க நகைக் கடன்களுக்கு இனி ஒரு கிராமுக்கு அதிகபட்சமாக ரூ.10,000 வரை கடன் வழங்கப்படும் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது.
கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் அனைத்துக் கூட்டுறவு நிறுவனங்களிலும் வழங்கப்படும் நகைக் கடன்களுக்கு, இனி ஒரு கிராமுக்கு அதிகபட்சமாக ரூ.10,000 வரை கடன் வழங்க அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தமிழகக் கூட்டுறவுத்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தமிழகத்தில் விவசாயிகள், சிறு வணிகர்கள் மற்றும் சாமானிய எளிய மக்களின் அவசரப் பணத் தேவைகளுக்குக் கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்கள் பிரதான ஆதாரமாக விளங்கி வருகின்றன. இந்நிலையில், கூட்டுறவு நிறுவனங்களில் வழங்கப்படும் நகைக் கடன்களின் அளவை உயர்த்துவது தொடர்பாக இன்று (05-10-2026) முக்கியக் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
கடந்த ஆண்டில் நகைக் கடன்களுக்கான அதிகபட்ச வட்டி விகிதம் 12 சதவீதத்திலிருந்து 13 சதவீதமாக உயர்த்தப்பட்டிருந்ததுடன், தங்கத்தின் சந்தை மதிப்பில் 75 சதவீதம் அல்லது கிராம் ஒன்றிற்கு அதிகபட்சமாக ரூ.7,000 மட்டுமே கடன் தொகையாக வழங்கப்பட்டு வந்தது. மேலும், 6 மாத கால அவகாசம் கொண்ட கடன்களுக்கு மாதாந்திர சராசரி சந்தை மதிப்பைக் கணக்கில் கொண்டே 75 சதவீதம் வரை கடன் விநியோகம் செய்யப்பட்டது.
இதையும் படிங்க: வெற்றி பயணம் திட்டத்திற்கு தடை விதிக்க கோரி வழக்கு! சென்னை உயர்நீதிமன்றத்தில் நாளை விசாரணை!
இதனை மாற்றியமைக்கும் வகையில், தற்போதைய தங்கத்தின் சந்தை விலை உயர்வுக்கு ஏற்ப, பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு நகைக் கடன்களுக்கு (Jewel Loan) ஒரு கிராமுக்கு வழங்கப்படும் கடன் தொகையை அதிகபட்சமாக ரூ.10,000 வரை அல்லது நகைகளின் சந்தை மதிப்பில் 75 சதவீதம் என அதிரடியாக உயர்த்தி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அதேபோல், வட்டி விகிதத்திலும் முக்கியச் சீரமைப்புகள் கொண்டுவரப்பட்டுள்ளன. மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் தங்களது நேரடிக் கிளைகள் மூலம் வழங்கும் நகைக் கடன்களுக்கான வட்டிக்கும், கிராமப்புறங்களில் செயல்படும் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுச் சங்கங்கள் (PACCS) மூலம் வழங்கப்படும் கடன்களுக்கான வட்டிக்கும் இடையே நீண்டகாலமாகப் பெரும் வேறுபாடு நிலவி வந்தது.
இதனை முழுமையாகச் சீரமைக்கும் விதமாக, தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் நிர்ணயிக்கும் வட்டி விகிதமானது, DCCB கிளைகளில் பொதுமக்களுக்கு நேரடியாக வழங்கப்படும் நகைக் கடன் வட்டியை விடக் குறைந்தபட்சம் 1.25 சதவீதம் குறைவாக இருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், PACCS சங்கங்களின் லாப வரம்பு (Margin) 2.25 சதவீதத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும் எனவும் புதிய வழிகாட்டுதல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த உயர்த்தப்பட்ட புதிய கடன் அளவானது, இனி புதிதாகப் பெறப்படும் நகைக் கடன்களுக்கு மட்டுமின்றி, ஏற்கனவே பெறப்பட்டு தற்போது புதுப்பிக்கப்படும் நகைக் கடன்களுக்கும் முழுமையாகப் பொருந்தும் என்று கூட்டுறவுத்துறையின் துணை இயக்குநர் மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மதுரை, நாகர்கோவில் பாதாள சாக்கடை தனியார்மயம்: தவெக அரசு முடிவை கைவிட சிபிஎம் வலியுறுத்தல்!