கூட்டுறவு பயிர்க்கடன் தள்ளுபடி: ரூ.953 கோடி நிதி சுமையை ஏற்று தமிழ்நாடு அரசு அரசாணை!
கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெற்ற விவசாயிகளுக்கு ரூ.953 கோடியே 6 லட்சம் கூடுதல் நிதிச்சுமையை ஏற்று தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெற்றுள்ள விவசாயிகளுக்கு மேலும் பயனளிக்கும் வகையில், சுமார் ரூ.953 கோடியே 6 இலட்சம் கூடுதல் நிதிச்சுமையைத் தமிழ்நாடு அரசே ஏற்றுக்கொண்டு பயிர்க்கடன் தள்ளுபடி தொடர்பான வரலாற்றுச் சிறப்புமிக்க கூடுதல் அரசாணையை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வரும் விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி திட்டத்தின் கீழ், பல்வேறு வரம்புகளின் அடிப்படையில் கடன் தள்ளுபடிச் சலுகைகள் வழங்கப்பட்டு வந்தன. இந்நிலையில், குறிப்பிட்ட கடன் வரம்பிற்குள் உள்ள விவசாயிகளின் பொருளாதார நிலையையும், கடன் சுமையையும் கருத்தில் கொண்டு அவர்களுக்குக் கூடுதல் நிவாரணம் வழங்க அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது.
இதன்படி வெளியிடப்பட்டுள்ள புதிய அரசாணையில், கூட்டுறவு வங்கிகளில் ரூ.75,000 முதல் ரூ.1,00,000 வரை பயிர்க்கடன் பெற்றுள்ள 2 லட்சத்து 38 ஆயிரம் விவசாயிகளுக்கு, அதிகபட்சமாக தலா ரூ.40,000 வரை கூடுதல் கடன் தள்ளுபடி சலுகை வழங்கப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: காங்கிரஸ் மூத்த தலைவர் எம். கிருஷ்ணசாமிக்கு 'தகைசால் தமிழர்' விருது அறிவிப்பு!
இப்புதிய சலுகை மற்றும் விரிவாக்கத்தின் காரணமாக மாநில அரசுக்குக் கூடுதலாக ரூ.953 கோடியே 6 லட்சம் நிதிச்சுமை ஏற்படுகிறது. விவசாயிகள் நலன் ஒன்றையே முதன்மையாகக் கொண்டு இந்த முழு நிதிச்சுமையையும் அரசே ஏற்றுக்கொண்டு கூடுதல் நிதியை இத்திட்டத்திற்கு முழுமையாக ஒதுக்கியுள்ளது. அரசின் இந்த விரிவான சலுகை மூலம் கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்ற லட்சக்கணக்கான சிறு, குறு மற்றும் நடுத்தர விவசாயிகள் தங்களது கடன் சுமையிலிருந்து பெருமளவில் விடுபட்டுப் பயனடைவர் என்பதால், டெல்டா உள்ளிட்ட அனைத்து மாவட்ட விவசாய அமைப்புகள் மத்தியிலும் விவசாயப் பெருங்குடி மக்கள் மத்தியிலும் பெரும் மகிழ்ச்சியும் வரவேற்பும் எழுந்துள்ளது.
இதையும் படிங்க: முதலீட்டாளர்களுடன் சந்திப்பு.. இன்றிரவு லண்டன் நோக்கி புறப்படும் விஜய்..!! தமிழக முதல்வராக முதல் பயணம்!!