×
 

3 தமிழர்கள் சுட்டுக்கொலை விவகாரத்தில் தவெக அரசு மௌனம் காப்பது ஏன்? உதயநிதி ஸ்டாலின் காட்டம்!

கர்நாடக வனத்துறையினரால் 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில் தமிழ்நாடு அரசு மௌனம் காப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சாடியுள்ளார்.

கர்நாடக மாநில வனப்பகுதியில் எல்லையோரத்தைச் சேர்ந்த அப்பாவித் தமிழர்கள் மூவரை அம்மாநில வனத்துறையினர் துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்த கொடூர சம்பவம் தொடர்பாக, தமிழ்நாடு அரசு சார்பில் இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்தவொரு வலுவான கண்டனமும் வெளியிடப்படாமல் இருப்பது மிகுந்த அதிர்ச்சியளிப்பதாகத் தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மிகக் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள காட்டமான அறிக்கையில், சட்டப்பேரவையில் இந்த விவகாரம் தொடர்பாகப் பதிலளித்த துறை அமைச்சர், உண்மையான கள நிலவரத்தை எடுத்துரைக்காமல் கர்நாடக வனத்துறையின் வாதத்தையே சட்டப்பேரவையில் எதிரொலித்தது வேதனையளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். 

தமிழ்நாடு அரசு சார்பிலோ அல்லது முதலமைச்சர் சார்பிலோ கர்நாடக முதலமைச்சருக்கு விளக்கம் கேட்டு இதுவரை ஒரு கடிதம் கூட எழுதப்படவில்லை என்றும், ஆளும் தவெக தலைவர் என்கிற முறையில் பட்டும் படாமல் சம்பிரதாயத்திற்கு மட்டுமே ஓர் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர் சாடியுள்ளார்.

இதையும் படிங்க: 6 ஐ.பி.எஸ் அதிகாரிகள் உட்பட 10 காவல் அதிகாரிகள் இடமாற்றம்! தமிழக அரசு அதிரடி உத்தரவு!

சென்னையில் நாளை தென் மாநில முதலமைச்சர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ள சூழலில், இம்மாநாட்டில் பங்கேற்கும் கர்நாடக முதலமைச்சரைத் தமிழ்நாடு முதலமைச்சர் நேரில் சந்தித்து, தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட இந்தச் சம்பவம் தொடர்பாக நேரடி விளக்கத்தைக் கேட்டுப் பெற வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், கர்நாடக காவல்துறையே இவ்வழக்கை விசாரித்தால் உண்மை வெளிவராது என்பதால், நம்பகமான சுதந்திரமான நீதி விசாரணை அல்லது நடுநிலையான விசாரணை நடத்தத் தமிழ்நாடு அரசு உரிய அழுத்தம் கொடுக்க வேண்டும் எனக் கோரியுள்ளார். 

இச்சம்பவத்தில் மனித உரிமை மீறல்கள் மிகக் கொடூரமாக அரங்கேறியுள்ளதால், தேசிய மனித உரிமைகள் ஆணைய வழிகாட்டுதல்கள் மற்றும் உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளின் அடிப்படையில் துப்பாக்கிச்சூடு நடத்திய வனத்துறையினர் மீது கொலை வழக்குப் பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய கூடுதல் இழப்பீட்டுத் தொகையையும் வாழ்வாதாரத்தையும் கர்நாடக அரசிடமிருந்து பெற்றுத் தரத் தமிழ்நாடு முதலமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் திட்டவட்டமாக வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: தெருக்களில் உள்ள சாதி பெயர்களை அகற்றுவதை உறுதி செய்க! தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share