×
 
☰

ஆவின் பாலுக்கு ஆதார் அட்டையா? தமிழக அரசுக்கு சிபிஐ எச்சரிக்கை!

ஆவின் பால் தட்டுப்பாட்டை போக்கிட தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள தீவிர ஆவின் பால் தட்டுப்பாட்டைப் போக்கத் தமிழக அரசு உடனடியாகத் தலையிட்டுத் தீர்வு காண வேண்டும் என்றும், பால் வாங்க வரும் வாடிக்கையாளர்களிடம் ஆதார் அட்டை கேட்டு கெடுபிடி செய்வதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் இன்று வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ ஊடக அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ஆவின் பால் பாக்கெட்டுகளின் தினசரி விநியோகம் 10 விழுக்காடு முதல் 15 விழுக்காடு வரை அதிரடியாகக் குறைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் ஆவின் பச்சை நிறப் பால் பாக்கெட்டுகளின் தட்டுப்பாடு தமிழ்நாடு முழுவதும் மிகக் கடுமையாக அதிகரித்துள்ளது.

அண்மைக் காலமாக ஆவின் பால் வாங்கும் வாடிக்கையாளர்களிடம் ஆதார் அட்டை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என்று அதிகாரிகள் கெடுபிடி காட்டி வருகின்றனர். அவ்வாறு ஆதார் அட்டை வழங்காத நுகர்வோருக்குப் பால் பாக்கெட்டுகள் தர முடியாது என அப்பட்டமாக மறுக்கப்படுகிறது.

இதையும் படிங்க: சாலையில் படுத்து உருண்ட கம்யூனிஸ்ட்கள்... குண்டு கட்டாய் தூக்கிய விஜய் போலீஸ்...!

மேலும், ஆவின் பால் விற்பனை செய்யும் முகவர்கள் மற்றும் சிறு கடைகளுக்கு விநியோகிக்கப்படும் பாலின் அளவும் பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது. அரசின் இத்தகைய நடவடிக்கைகளாலும் போதிய திட்டமிடல் இன்மையாலும் ஆவின் பாலை அன்றாடம் நம்பியிருக்கும் பொதுமக்கள் மற்றும் நடுத்தரக் குடும்பங்கள் மிகக் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகி வருகின்றனர்.

எனவே, இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு உடனடியாகத் தலையிட்டு உரிய தீர்வு காண வேண்டும். தட்டுப்பாடின்றி அனைவருக்கும் ஆவின் பால் கிடைப்பதை உறுதி செய்வதுடன், பொதுமக்கள் தலையில் தேவையற்ற கெடுபிடிகளைத் திணிக்காமல் பால் தட்டுப்பாட்டைப் போக்க போர்க்கால அடிப்படையில் ஆக்கப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: டெபாசிட் பறிகொடுத்த கம்யூ., கட்சிகள்!! தவெக கூட்டணியில் இணையுமா? அக்.,12ல் ஆலோசனை!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share