கோயில் நில பட்டா சட்டத்திருத்தம் வாபஸ்! உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு அறிவிப்பு!
சிறப்பு திருத்தச் சட்டத்தை அரசு திரும்ப பெற்றுக் கொண்டதால் வழக்கை முடித்து வைத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.
தமிழகத்தில் உள்ள கோயில் மற்றும் வக்பு வாரியச் சொத்துக்களைத் தனிநபர்கள் பட்டா மாற்றம் செய்யும் வகையில் கொண்டு வரப்பட்ட சட்டத்திருத்த அரசாணையைத் திரும்பப் பெற்றுக்கொண்டதாகத் தமிழக அரசு இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தெரிவித்துள்ளது. இதனையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாகத் தாக்கல் செய்யப்பட்ட மனுவைக் காலாவதியானதாகக் கருதி நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர்.
தமிழகத்தில் கோயில் நிலங்களைப் பாதுகாக்கும் விதமாக அவற்றின் மதிப்பை 'பூஜ்ஜியம்' எனப் பத்திரப் பதிவுத்துறையில் வைத்திருப்பது வழக்கம். இதன் மூலம் கோயில் நிலங்களை யாரும் பட்டா மாற்றவோ, பத்திரம் பதியவோ முடியாது.ஆனால், அரசு கொண்டு வந்த புதிய சட்டத்திருத்தத்தின்படி, கோயில் சொத்துக்களைத் தனிநபர்கள் பட்டா பெறவும், பெயர் மாற்றம் செய்யவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.இத்தகைய மாற்றங்கள் குறித்து முறையிட வேண்டுமென்றால் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் குழுவிடம் தான் செல்ல வேண்டும்; அந்த இடைப்பட்ட நேரத்தில் கோயில் சொத்துக்கள் பறிபோகும் அபாயம் உள்ளது.எனவே, ஆகஸ்ட் 29-ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட இந்தச் சட்டவிரோத உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.
இதையும் படிங்க: தெருக்களில் சாதிப் பெயர் நீக்கக் கோரிய வழக்கு... பதில் மனுத் தாக்கல் செய்ய மதுரை கிளை உத்தரவு..!!
இந்த மனுவை ஏற்கனவே விசாரித்த நீதிபதிகள், அரசின் அந்த உத்தரவிற்கு இடைக்காலத் தடை விதித்திருந்தனர். இந்நிலையில், இன்று இந்த வழக்கு நீதிபதிகள் ஜோதிராமன் மற்றும் சதீஷ்குமார் அமர்வு முன்பாக மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சர்ச்சைக்குரிய அந்த அரசாணை திரும்பப் பெறப்படுவதாகவும், விரைவில் புதிய அரசாணை பிறப்பிக்கப்படும் என்றும் உறுதி அளித்தார். அரசின் இந்த விளக்கத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், அரசாணை வாபஸ் பெறப்பட்டதால் இந்த மனு காலாவதியாகிவிட்டதாகக் கூறி வழக்கை முடித்து வைத்தனர். கோயில் நிலங்களைப் பாதுகாப்பதில் முக்கியத் திருப்புமுனையாகப் பார்க்கப்படும் இந்த அறிவிப்பு ஆன்மீகவாதிகள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: கடலில் செயற்கை பவளப்பாறைகள்... பணியை மும்முரமாக தொடங்கிய மீன்வளத் துறை..!