×
 

பழங்குடியினரை வெளியேற்றும் சதியா? மத்திய அரசின் வன உரிமை சட்டத்திற்கு அமைச்சர் வன்னியரசு எதிர்ப்பு!

மத்திய பாஜக அரசின் வன உரிமைச் சட்டத்தை வேடிக்கை பார்க்க மாட்டோம் எனக் கல்வராயன் மலை விழாவில் அமைச்சர் வன்னியரசு கூறியுள்ளார்.

மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள வன உரிமைச் சட்டத்தின் மூலமாக மலைப்பகுதிகளில் வசிக்கும் பூர்வகுடி பழங்குடியின மக்களை அப்புறப்படுத்த முயலும் சதியைத் தமிழ்நாடு அரசு ஒருபோதும் வேடிக்கை பார்க்காது என்று சமூக நீதித் துறை அமைச்சர் வன்னியரசு காரசாரமாகத் தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை அருகே உள்ள கரியாலூர் கோடை விழா அரங்கில், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியர் பத்மஜா தலைமையில் கோடை விழா மிக விமர்சையாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சமூக நீதித் துறை அமைச்சர் வன்னியரசு மற்றும் வனத் துறை அமைச்சர் ரஞ்சித் குமார் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்துகொண்டனர். விழாவின் தொடக்கமாக, அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் பொதுமக்களுக்காகச் செயல்படுத்தப்பட்டு வரும் நலத்திட்டங்கள் குறித்து அமைக்கப்பட்டிருந்த 45 கண்காட்சி அரங்குகளை அமைச்சர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்துப் பார்வையிட்டனர்.

தொடர்ந்து நடைபெற்ற விழாவில், 6,555 பயனாளிகளுக்குச் சுமார் 9 கோடியே 13 லட்சம் ரூபாய் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிச் சமூக நீதித் துறை அமைச்சர் வன்னியரசு சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள வன உரிமைச் சட்டத்தின் மூலமாக, மலைப்பகுதிகளில் நீண்டகாலமாக வசித்து வரும் இந்த மண்ணின் மைந்தர்களான பூர்வகுடி பழங்குடியின மக்களை அப்புறப்படுத்தக்கூடிய மிக மோசமான சதியைச் செய்ய முனைகிறது. அதை ஒருபோதும் தமிழ்நாடு அரசு வேடிக்கை பார்க்காது எனச் சாடினார்.

இதையும் படிங்க: "ஏழைகளின் சோற்றில் மண்ணள்ளி போடும் மோடி அரசு! சிபிஎம் தலைவர் பி. சண்முகம் கண்டனம்!

மேலும் பேசிய அவர், பழங்குடியின மக்களுக்கான அரசாகவும், அவர்களை முழுமையாகப் பாதுகாக்கின்ற அரசாகவும் தான் தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது. நாம் அனைவரும் ஒன்றிணைந்து கள்ளக்குறிச்சியை 'நல்ல குறிச்சியாக' மாற்றுவோம் எனத் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து அரசுப் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் வண்ணமயமான கலை நிகழ்ச்சிகளும், சிறப்புப் பேச்சாளர்களின் சொற்பொழிவுகளும் நடைபெற்றன. கல்வராயன் மலைப் பகுதி மக்கள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டு இந்தக் கோடை விழாவைச் சிறப்பித்தனர்.

இதையும் படிங்க: தூய்மை பணியாளர்களின் முக்கிய கோரிக்கைக்கு முற்றுப்புள்ளி! அமைச்சர் வன்னியரசு வெளியிட்ட ஹேப்பி நியூஸ்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share