“வீடு தேடி வரும் பொங்கல் டோக்கன்!” - அரசியல்வாதிகளுக்கு நோ எண்ட்ரி! தமிழக கூட்டுறவுத்துறை அதிரடி!
தமிழகத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பிற்கான டோக்கன்கள் ஜனவரி 3-ஆம் தேதி முதல் விநியோகிக்கப்பட உள்ள நிலையில், அதற்கான பணிகளை விரைந்து முடிக்கக் கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் 2026 பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகத்திற்கான முன்னேற்பாடுகள் ‘ஜெட்’ வேகத்தில் தொடங்கப்படுள்ளது. அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு எவ்விதப் புகாருமின்றிப் பரிசுத் தொகுப்பை வழங்கக் கூட்டுறவுத்துறை விரிவான வழிகாட்டுதல்களை இன்று வெளியிட்டுள்ளது.
இதன்படி, வரும் ஜனவரி 2-ம் தேதிக்குள் டோக்கன்களை அச்சிட்டு முடித்து, சுழற்சி முறையில் விநியோகிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக, அரசியல் தலையீடுகள் இன்றி நியாயவிலைக் கடை பணியாளர்கள் மட்டுமே நேரடியாக இல்லங்களுக்குச் சென்று டோக்கன் வழங்க வேண்டும் எனத் திட்டவட்டமாக உத்தரவிடப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலைத் தவிர்க்க நேரக் கட்டுப்பாடு மற்றும் கூடுதல் பணியாளர்கள் நியமனம் எனப் பல அதிரடி மாற்றங்கள் இந்த ஆண்டு அமலுக்கு வருகின்றன.
2026-ஆம் ஆண்டு தைத்திருநாளை முன்னிட்டு தமிழக அரசு வழங்கவுள்ள பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் குறித்துக் கூட்டுறவுச் சங்கங்களின் கூடுதல் பதிவாளர் அனைத்து மண்டல இணைப்பதிவாளர்களுக்கும் அதிரடி சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். இதன்படி, பொங்கல் பரிசு பெறுவதற்கான டோக்கன்கள் வரும் ஜனவரி 2-ஆம் தேதிக்குள் அச்சிடப்பட்டு விநியோகத்திற்குத் தயார் நிலையில் இருக்க வேண்டும். இந்தத் டோக்கன்களை ரேஷன் கடை ஊழியர்களே நேரடியாக அட்டைதாரர்களின் வீடுகளுக்குச் சென்று வழங்க வேண்டும்; எக்காரணத்தைக் கொண்டும் அரசியல் சார்ந்த நபர்களையோ அல்லது வெளி நபர்களையோ இந்தப் பணியில் ஈடுபடுத்தக் கூடாது என ‘கிடுக்கிப்பிடி’ உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பொதுமக்கள் கவனத்திற்கு! “இ-சேவை பக்கம் போயிடாதீங்க! காரணம் இதுதான்! அரசு கேபிள் டிவி நிறுவனம் அறிவிப்பு!
ரேஷன் கடைகளில் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருப்பதைத் தவிர்க்க சுழற்சி முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன்படி, தெருவாரியாகப் பிரிக்கப்பட்ட அட்டவணையின் அடிப்படையில், முதல் நாளில் முற்பகல் 100 பேர், பிற்பகல் 100 பேர் என மொத்தம் 200 பேருக்கு மட்டுமே பரிசுத் தொகுப்பு வழங்கப்படும். இரண்டாம் நாள் முதல் இடவசதியைப் பொறுத்து முற்பகல் 200 பேர் மற்றும் பிற்பகல் 200 பேர் வரை பொருட்களைப் பெற்றுக்கொள்ளலாம். குறிப்பாக, 1500-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைகள் கொண்ட கடைகளில் தட்டுப்பாடின்றி விநியோகம் செய்ய மூன்று பணியாளர்கள் வரை நியமிக்கப்பட உள்ளனர்.
பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பொறுத்தவரை, அதிகக் கூட்ட நெரிசல் அல்லது சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ள கடைகளின் பட்டியல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, போதிய போலீஸ் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். ஒவ்வொரு நாளும் மாலை 5 மணிக்குள் டோக்கன் விநியோக முன்னேற்றம் குறித்து Google Sheet வாயிலாகத் தலைமையிடத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. தரமான பொருட்களைப் போதிய அளவில் முன்கூட்டியே இருப்பு வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் தொடங்கும் தேதி விரைவில் முதலமைச்சரால் முறைப்படி அறிவிக்கப்பட உள்ளது.
கடந்த ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும் தரமான பச்சரிசி, சர்க்கரை மற்றும் கரும்பு ஆகியவற்றுடன் ரொக்கப் பணமும் வழங்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்துள்ளது. கரும்பு கொள்முதல் மற்றும் பரிசுப் பை தயாரிப்பு குறித்த முதற்கட்டப் பணிகள் ஏற்கனவே முடிவடைந்துள்ள நிலையில், டோக்கன் விநியோகம் குறித்த இந்தத் தகவல் இனிப்பான செய்தியாக அமைந்துள்ளது. ஜனவரி இரண்டாவது வாரத்தில் விநியோகம் தொடங்க வாய்ப்புள்ளதால், எவ்விதப் புகாருமின்றி இந்தப் பணிகளை முடிக்கக் கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: “இந்தியா இப்போ ‘ரீஃபார்ம் எக்ஸ்பிரஸ்’!” உலகமே உற்றுப்பார்க்கும் 2025 டாப் சாதனைகள் - பிரதமர் மோடி பெருமிதம்!