×
 

இந்து சமய அறநிலையத்துறை முக்கிய அறிவிப்பு! அறங்காவலர் பதவிக்கு விண்ணப்பிக்க மேலும் அவகாசம்!

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 214 திருக்கோயில்களுக்குப் பரம்பரை முறைவழி சாரா அறங்காவலர்கள் நியமனத்திற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வரும் ஆகஸ்ட் 12 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 214 திருக்கோயில்களுக்குப் பரம்பரை முறைவழி சாரா அறங்காவலர்கள் நியமனம் செய்வதற்கான விண்ணப்ப அவகாசத்தை ஆகஸ்ட் 12, 2026 வரை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தலைமையிலான ஆட்சியில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சீ. ரமேஷ் வழிகாட்டுதலின்படி, இதுவரை துறை கட்டுப்பாட்டிலுள்ள 9,205 திருக்கோயில்களுக்குப் பரம்பரை முறைவழி சாரா அறங்காவலர்கள் நியமனம் செய்வதற்கு விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.

சட்டப்பிரிவு 46(iii)-ன் கீழ் உள்ள 214 திருக்கோயில்களுக்கு அறங்காவலர்களை நியமிக்கக் கடந்த 14.06.2026 அன்று நாளிதழ்கள் மற்றும் இணையதளத்தில் விளம்பரம் வெளியிடப்பட்டது. இதற்காக விண்ணப்பிக்க 22.07.2026 (இன்று) மாலை 5.45 மணி வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.

இதையும் படிங்க: இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பு! 757 ஆன்மீக ஆலயங்களுக்கு புதிய அறங்காவலர்கள் தேர்வு!

இந்நிலையில், விண்ணப்பிக்கும் இறுதி நாள் இன்றுடன் நிறைவடையும் சூழலில், பக்தர்களின் கோரிக்கையைக் கனிவுடன் பரிசீலித்தும், அதிகப்படியான தகுதி வாய்ந்த நபர்கள் விண்ணப்பிக்க வாய்ப்பளிக்கும் வகையிலும் விண்ணப்ப அவகாசம் 12.08.2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

நிர்ணயிக்கப்பட்ட விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து, இந்து சமய அறநிலையத்துறையின் இணையதளம் வாயிலாகப் பதிவேற்றம் செய்யலாம். அல்லது நேரில் / அஞ்சல் மூலமாக அந்தந்தத் திருக்கோயில் அமைந்துள்ள மண்டல இணை ஆணையர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கலாம்.

தகுதியும் விருப்பமும் உள்ள ஆன்மிக அன்பர்கள் மற்றும் பக்தர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

இதையும் படிங்க: திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட ரூ. 15 கோடி மல்டி லெவல் கார் பார்க்கிங் திட்டம் ரத்து!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share