சாட்டையை எடுத்த தமிழக அரசு.. தொடங்கியது அதிரடி ஆக்ஷன்... மருத்துவர்கள், செவிலியர்களுக்கு பறந்த எச்சரிக்கை...!
அரசு மருத்துவமனைகளில் பணிநேரத்தை கட்டாயம் பின்பற்ற வேண்டும்: மருத்துவர்கள், செவிலியர்களுக்கு சுகாதாரத் துறை உத்தரவு
அரசு மருத்துவமனைகள் மற்றும் பொது சுகாதாரத் துறையின் கீழ் செயல்படும் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிநேரங்களில் கட்டாயம் பணியில் ஈடுபட வேண்டும் என சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாக மருத்துவப் பணிகளில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு மாற்றாக தூய்மைப் பணியாளர்கள் மருத்துவ சேவைகளில் ஈடுபடுத்தப்படுவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன. இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையிலும், மருத்துவ சேவைகளின் தரத்தை உறுதி செய்யும் நோக்கிலும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதன்படி, புறநோயாளிகள் பிரிவு (OP) காலை 7.30 மணி முதல் மதியம் 12 மணி வரை செயல்படும் நிலையில், அந்த பிரிவில் பணியாற்றும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் குறிப்பிட்ட நேரத்தில் கட்டாயம் பணிக்கு வருகை தர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அலட்சியம்..! அப்பாவி மக்களின் உயிரை பலி வாங்குவதா..? சீமான் காட்டம்..!!
அதேபோல், உள்நோயாளிகள் பிரிவு (IP) மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவுகளில் (Emergency Ward) 24 மணி நேரமும் சுழற்சி முறையில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் பணியாற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட மருத்துவ அமைப்புகளில் முக்கிய பொறுப்பில் உள்ள அதிகாரிகள் காலை 8 மணி முதல் தங்களது பணிகளை தொடங்க வேண்டும் என்ற நடைமுறையும் மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே, மருத்துவப் படிப்பு அல்லது மருத்துவம் தொடர்பான தகுதி பெற்றிராத சிலர் மருத்துவப் பணிகளில் ஈடுபடுத்தப்படுவதாகவும், குறிப்பாக தூய்மைப் பணியாளர்கள் மற்றும் இதர பணியாளர்கள் நோயாளிகளுக்கு முதலுதவி மற்றும் மருத்துவ சேவைகள் வழங்க பயன்படுத்தப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இந்த நிலையில், எந்த சூழலிலும் தூய்மைப் பணியாளர்கள் அல்லது மருத்துவத் தகுதி இல்லாத பிற பணியாளர்களை மருத்துவ சேவைகளில் ஈடுபடுத்தக் கூடாது என சுகாதாரத் துறை கடுமையான உத்தரவை பிறப்பித்துள்ளது.
மருத்துவர்கள் அல்லது செவிலியர்கள் பணியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், தகுதி இல்லாத பணியாளர்களை மருத்துவப் பணிகளில் ஈடுபடுத்துவது அல்லது அதற்கு ஊக்கமளிப்பது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அந்த நேர பணிப்பொறுப்பில் இருந்த அதிகாரிகள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஒவ்வொரு ஊழியரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை மட்டுமே மேற்கொள்ள வேண்டும் என்றும், மருத்துவர்கள் அல்லது செவிலியர்களின் வற்புறுத்தலின் பேரில் கூட மருத்துவத் தகுதி இல்லாத பணியாளர்கள் மருத்துவ சேவைகளை வழங்கக் கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுபோன்ற விதிமீறல்கள் அல்லது தவறான மருத்துவ சேவைகள் வழங்கப்படுவதாக நோயாளிகள் கருதினால், அவர்கள் 104 என்ற சுகாதார உதவி எண்ணை தொடர்புகொண்டு புகார் அளிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு பெறப்படும் புகார்களின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட பணிப்பொறுப்பு மருத்துவர் மற்றும் செவிலியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது.
இதையும் படிங்க: அரசு மருத்துவமனையில் ‘வாத்தி’ ரெய்டு விட்ட தவெக அமைச்சர்... உடனே பறந்த கடும் எச்சரிக்கை...!