×
 

ஆட்சி கவிழ்ப்பு சதி..!! கைதான 3 பேரையும் விசாரிக்கணும்..! போலீஸ் மனுத் தாக்கல்..!!

ஆட்சி கவிழ்ப்பு சதி விவகாரத்தில் கைது செய்யப்பட்ட மூன்று பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டின் அரசியல் களம் மீண்டும் பரபரப்பான நிலைக்குச் சென்றுள்ளது. தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தலைமையிலான அரசு பதவியேற்று சில வாரங்களே ஆகியிருக்கும் நிலையில், ஆட்சியை கவிழ்க்க சதி நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்தச் சதியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் மூன்று பேரை சென்னை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களை எழும்பூர் நீதிமன்றம் ஜூலை 15 வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது. இந்தச் சம்பவம் தமிழ்நாடு அரசியலில் பெரும் புயலை கிளப்பியது. 

சம்பவம் தொடங்கியது ஊத்தங்கரை தொகுதி தவெக எம்.எல்.ஏ. என். இளையராஜா மூலமாக. அவர் சென்னை மாநகர காவல் ஆணையரிடம் அளித்த புகாரில், தன்னை ஒரு நபர் தொடர்பு கொண்டு பேரம் பேசியதாகக் கூறினார். பிறகு திருநாவுக்கரசு என அடையாளம் காணப்பட்டார். திருநாவுக்கரசு இளையராஜாவிடம், “முக்கிய கட்சியைச் சேர்ந்தவர்கள் உங்களிடம் பேசச் சொன்னார்கள்” என்று தொடங்கி, நம்பிக்கையில்லா தீர்மானத்தில் சபாநாயகருக்கு எதிராக வாக்களித்தால் அல்லது ராஜினாமா செய்தால் கோடிக்கணக்கில் பணம் தருவதாக பேரம் பேசியதாக புகாரில் தெரிவிக்கப்பட்டது. இந்தப் பேரத்தில் ரூ.35 கோடி வரை வழங்கப்படும் எனக் கூறப்பட்டதாகவும், மிரட்டல் கலந்த முயற்சிகளும் இருந்ததாகவும் எம்.எல்.ஏ. தெரிவித்தார். 

போலீசார் உடனடியாக விசாரணையைத் தொடங்கினர். இந்தச் சதி ஒரு எம்.எல்.ஏ.வை மட்டும் இலக்காகக் கொண்டதல்ல; சுமார் 10 முதல் 15 தவெக எம்.எல்.ஏ.க்களை இலக்காகக் கொண்டு, அவர்களை ஒன்றாக ராஜினாமா செய்ய வைத்து அரசுக்கு பெரும்பான்மை இழக்கச் செய்யும் திட்டம் எனக் கூறப்படுகிறது. திருநாவுக்கரசு தவெக எம்.எல்.ஏ.க்களுடன் முன்பிருந்த தொடர்புகளைப் பயன்படுத்தியதாகவும், தேர்தல் பணிகளின் போது ஏற்பட்ட பரிச்சயத்தை இந்த முயற்சிக்கு பயன்படுத்தியதாகவும் போலீசார் தெரிவித்தனர். 

இதையும் படிங்க: பொறுப்பா நடந்துக்கோங்க..! அரசு குறித்து அவதூறு..! காவல்துறை வார்னிங்.!

விசாரணையில் திருநாவுக்கரசுடன் நரேஷ் மற்றும் தியாகராஜன் ஆகிய இருவரும் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்தது. மூவரும் கைது செய்யப்பட்டு, திருவல்லிக்கேணி போலீஸ் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஜூலை 1 அன்று அவர்கள் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, நீதிபதி அவர்களை ஜூலை 15 வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இந்த நிலையில், 3 பேரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அனுமதி வழங்கப்படும் பட்சத்தில் விசாரணை விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதையும் படிங்க: பீகார், குஜராத், ம.பி.-க்கு இடைத்தேர்தல்..! தமிழகம் மட்டும் வெயிட்டிங் லிஸ்ட்..!! பெரும் குழப்பம்...!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share