காங்கிரஸில் ராஜ்யசபா சீட் யாருக்கு? ராகுல்காந்திக்கு தலைவலி! டெல்லிக்கு டிக்கெட் போடும் முக்கிய நிர்வாகிகள்!
தேமுதிகவுக்கு 1 எம்பி சீட் கொடுத்தாகிவிட்டது. மீதமுள்ள ஒன்றை ஏதேனும் ஒரு கூட்டணி கட்சிக்கு தந்துவிட்டு, 2 இடங்களில் திமுக போட்டியிட முடிவு செய்துள்ளது.
சென்னை: தமிழகத்தைச் சேர்ந்த ஆறு ராஜ்யசபா எம்பிக்களின் பதவிக்காலம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, புதிய உறுப்பினர்களைத் தேர்வு செய்ய தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய எம்எல்ஏக்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப திமுக 4 சீட்களை எளிதாகப் பெறும் நிலையில் உள்ளது.
ராஜ்யசபா சீட் என்ற துருப்புச் சீட்டைப் பயன்படுத்தி, தேமுதிகவை ஏற்கனவே தனது கூட்டணி வலையில் இழுத்துள்ளது திமுக. தேமுதிகவுக்கு ஒரு சீட் கொடுத்தாகிவிட்டது. மீதமுள்ள ஒரு சீட்டை ஏதேனும் சிறிய கூட்டணி கட்சிக்கு அளித்துவிட்டு, திமுக 2 இடங்களில் போட்டியிட முடிவு செய்துள்ளது.
இதற்கிடையே, திமுக – காங்கிரஸ் இடையேயான சட்டசபை தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை இழுபறியில் உள்ள நிலையில், காங்கிரஸ் தரப்பில் “எப்படியாவது கூட்டணியை இறுதி செய்து ஒரு ராஜ்யசபா சீட்டைப் பெற்றுவிட வேண்டும்” என்ற தீவிர முயற்சி நடைபெற்று வருகிறது. கடந்த லோக்சபா தேர்தலில் சீட் கிடைக்காத காங்கிரஸ் தலைவர்கள் இம்முறை எப்படியும் ராஜ்யசபா சீட் பெற வேண்டும் என்ற இலக்குடன் டில்லி நோக்கி விரைந்துள்ளனர்.
இதையும் படிங்க: திமுக ஓட்டு வங்கியில் தவெகவால் ஓட்டை விழும்! காங்., கழட்டிவிட்டால் மொத்தமும் காலி!! உளவுத்துறை ரிப்போர்ட்!
தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் தங்கபாலு, திருநாவுக்கரசர், செல்லக்குமார், அழகிரி, சொர்ணா சேதுராமன், ராம சுகந்தன், ராஜேந்திரன் உள்ளிட்டோர் இந்தப் போட்டியில் முனைப்புடன் உள்ளனர்.
இவர்கள் பலரும் டில்லி சென்று சோனியா காந்தி, ராகுல் காந்தியை நேரில் சந்தித்து சீட் உறுதி செய்த பிறகே ஊர் திரும்ப உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ஷோடங்கர் திமுகவிடம் அதிக சீட்கள் கேட்டு பேரம் பேசி வரும் நிலையில், தமிழக காங்கிரஸ் மாநில நிர்வாகிகள் கூட்டணியை விரைவில் இறுதி செய்ய வேண்டும் என அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.
ஒருவேளை திமுக – காங்கிரஸ் கூட்டணி இறுதியானால், திமுக ஒரு ராஜ்யசபா சீட் வழங்கினால், காங்கிரஸ் சார்பில் யார் களமிறங்குவார் என்பது இன்னும் மர்மமாகவே உள்ளது. திமுகவின் 4 சீட் உறுதி, தேமுதிகவுக்கு ஒரு சீட், மீதமுள்ள ஒன்று சிறிய கூட்டணி கட்சிக்கு என்பது தற்போதைய கணக்கு. இந்த ராஜ்யசபா தேர்தல் தமிழக அரசியலில் கூட்டணி பலத்தையும், தலைவர்களின் லாபி பலத்தையும் மீண்டும் சோதிக்கும் முக்கிய தருணமாக அமைந்துள்ளது.
இதையும் படிங்க: ராஜ்யசபா எம்.பி தேர்தல் அறிவிப்பு! திமுக, அதிமுகவுக்கு நெருக்கடி! கழுத்தை நெறிக்கும் கூட்டணி கட்சிகள்!!