"ஜூன் 1 முதல் பள்ளிகள் திறப்பு": முன்னேற்பாடுகள் குறித்து பள்ளிக்கல்வி இயக்குநர் அதிரடி உத்தரவு!
ஜூன் 1-ல் பள்ளி திறப்பையொட்டி மாணவர்களுக்கு அன்றே விலையில்லா நலத்திட்டங்கள் கிடைக்கவும், கணினி ஆய்வகங்களைத் தயார் நிலையில் வைக்கவும் பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து வரும் ஜூன் மாதம் 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படவுள்ள நிலையில், அனைத்துப் பள்ளிகளிலும் மேற்கொள்ளப்பட வேண்டிய அத்தியாவசிய முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்துப் பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்கள் இன்று அனைத்து மாவட்டக் கல்வி அதிகாரிகளுக்கும் அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார். புதிய தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு கல்வித்துறையில் மேற்கொள்ளப்படும் முதல் பெரிய சீரமைப்பு நடவடிக்கை இதுவாகும்.
பள்ளிக்கல்வி இயக்குநர் விடுத்துள்ள அதிகாரப்பூர்வ சுற்றறிக்கையின்படி, 2026-27-ஆம் கல்வியாண்டிற்கான அரசின் விலையில்லா நலத்திட்டங்களான பாடப்புத்தகங்கள், குறிப்பேடுகள், சீருடைகள் மற்றும் புத்தகப் பைகள் ஆகியவற்றை மாணவர்கள் அனைவருக்கும் பள்ளி திறக்கும் ஜூன் 1-ஆம் நாளன்றே தங்கு தடையின்றிக் கிடைத்திட உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கு அனைத்துக் கல்வி அலுவலர்கள், தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒருங்கிணைந்து போர்க்கால அடிப்படையில் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பள்ளிகளில் உள்ள திறன் பலகைகள் (Smart Boards) மற்றும் உயர் தொழில்நுட்பக் கணினி ஆய்வகங்கள் (Hi-Tech Labs) அனைத்தும் பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் உரிய இணைய (Internet) வசதியுடன் தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
பள்ளி வளாகங்களின் தூய்மை மற்றும் மாணவர்களின் பாதுகாப்பு குறித்துப் பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பள்ளி வளாகம், வகுப்பறைகள், சமையலறை, கழிப்பறைகள் மற்றும் குடிநீர் தேக்கத் தொட்டிகள் ஆகியவை தூய்மையாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். குறிப்பாக, குடிநீர்த் தொட்டிகளைக் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்து, பாதுகாப்பான குடிநீர் கிடைப்பதை உறுதி செய்வதோடு, கழிவுநீர் சேகரிப்பு தொட்டிகள் (Septic Tanks), கிணறுகள் மற்றும் ஆழ்துளைக் கிணறுகள் (Borewells) ஆகியவை திறந்த நிலையில் இல்லாதவாறு பாதுகாப்பான மூடியிட்டுப் பராமரிக்கப்பட வேண்டும் என்று சாட்டையைச் சுழற்றியுள்ளார். பள்ளி வளாகங்களில் தேவையற்ற மற்றும் பயன்பாடற்ற பொருட்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்றும், குறிப்பாகப் பெண் குழந்தைகளின் பாதுகாப்பினை எக்காரணம் கொண்டும் சமரசம் செய்யாமல் உறுதி செய்திடல் வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: “ஓடிடி தளம், 5 காட்சிகள், கேளிக்கை வரி ரத்து!” - புதிய அரசுக்கு நடிகர் கமல்ஹாசன் விடுத்த 6 அதிரடிக் கோரிக்கைகள்!
கல்வித் தொடர்ச்சியை உறுதி செய்யும் நோக்கில், கடந்த 2025-26 கல்வியாண்டில் 5, 8 மற்றும் 10-ஆம் வகுப்புகளை நிறைவு செய்த மாணவர்களுக்கு EMIS இணையதளம் வழியாக உடனடியாக மாற்றுச் சான்றிதழ் (TC) வழங்கப்பட வேண்டும். அவ்வாறு படிப்பை நிறைவு செய்யும் மாணவர்கள், அருகில் உள்ள அரசு அல்லது அரசு உதவிபெறும் பள்ளிகளில் முறையே 6 மற்றும் 9-ஆம் வகுப்புகளில் சேர்க்கப்படுவதைச் சம்பந்தப்பட்ட பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் அசுர வேகத்தில் உறுதி செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த அதிரடி அறிவுரைகளைத் தலைமை ஆசிரியர்கள் முறையாகப் பின்பற்றுகிறார்களா என்பதை அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் (CEO) நேரில் சென்று தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும் எனப் பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க: "மின்வாரியத்திற்கு ₹2.5 லட்சம் கோடி கடன்": இலவச மின்சாரம் குறித்து அமைச்சர் நிர்மல்குமார் முக்கிய அறிவிப்பு!