"பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு TET தேர்வு!" ஆசிரியர் தேர்வு வாரியம் அதிரடி அறிவிப்பு!
பணியில் உள்ள ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) இன்று வெளியிட்டுள்ளது.
ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, 2026-ஆம் ஆண்டிற்கான ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) நடைபெறவுள்ளது. இந்தத் தேர்வு தற்போது பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு ஒரு முக்கிய வாய்ப்பாகக் கருதப்படுகிறது.
அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் 01.09.2025-க்குள் பணியில் சேர்ந்து, தற்போது இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாகப் பணியாற்றி வருபவர்கள் மட்டுமே இந்தத் தேர்விற்கு விண்ணப்பிக்க முடியும். இதற்கான விண்ணப்பப் பதிவு வரும் பிப்ரவரி 18, 2026 அன்று தொடங்குகிறது. தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் ஏப்ரல் 10, 2026 வரை ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்தேர்விற்கான முதற்கட்டத் தேர்வுகள் (தாள்-1) ஜூலை 4, 2026 அன்றும், இரண்டாம் கட்டத் தேர்வுகள் (தாள்-2) ஜூலை 5, 2026 அன்றும் தற்காலிகமாக நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு கட்டணமாகப் பொதுப் பிரிவினர் ஒவ்வொரு தாளுக்கும் ₹600 செலுத்த வேண்டும். SC, ST மற்றும் மாற்றுத்திறனாளிகள் பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்குச் சலுகை அளிக்கப்பட்டு, ஒவ்வொரு தாளுக்கும் ₹300 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள தேர்வர்கள் கடைசி நேர நெரிசலைத் தவிர்க்க முன்னதாகவே விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
அந்தந்தப் பணியிடங்களுக்குத் தமிழக அரசு மற்றும் தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் (NCTE) நிர்ணயித்துள்ள கல்வித் தகுதிகளை விண்ணப்பதாரர்கள் பெற்றிருக்க வேண்டும். தகுதியுடைய ஆசிரியர்கள் www.trb.tn.gov.in என்ற இணையதளம் வழியாக மட்டுமே ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் போது, தற்போது பணியாற்றி வரும் பள்ளியில் இருந்து பெறப்பட்ட பணிச் சான்றிதழை பதிவேற்றுவது கட்டாயமாகும்.
அனைத்து ஆசிரியர்களும் இதற்கு விண்ணப்பிக்க முடியாது. கீழே உள்ள நிபந்தனைகளைப் பூர்த்தி செய்பவர்கள் மட்டுமே தகுதியுடையவர்கள். அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் இடைநிலை அல்லது பட்டதாரி ஆசிரியராகப் பணியாற்றுபவர். 01.09.2025-க்குள் பணியில் சேர்ந்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும்போது தற்போது பணியாற்றும் பள்ளியில் இருந்து பெறப்பட்ட பணிச் சான்றிதழை பதிவேற்றுவது அவசியம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.