பெங்களூர், ஹைதராபாத் மாடலில் தமிழ்நாடு... ரெஸ்டோ பார்களுக்கு அனுமதி? CM விஜய் கிரீன் சிக்னல்..!!
இதன் மூலம் கோடிக்கணக்கான ரூபாய் முறைகேடான வருவாய் ஈட்டப்பட்டதாக விஜய் தேர்தல் பிரச்சாரங்களில் சாடியிருந்தார்.
மது விற்பனையில் நீண்டகாலமாக ஊழல் புகார்களுக்கு உள்ளாகியிருந்த தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தை (டாஸ்மாக்) முழுமையாக சீர்திருத்தம் செய்ய முதல்வர் விஜய் தலைமையிலான அரசு விரிவான திட்டத்தை வகுத்துள்ளது. தேர்தல் வாக்குறுதிகளில் முக்கிய இடம் பெற்ற இந்த சீர்திருத்த நடவடிக்கை, மக்களின் நீண்டகால கோரிக்கைகளுக்கு பதிலளிக்கும் வகையில் துரிதமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
முதல் கட்டமாக, மது பாட்டில்களுக்கு அறிவிக்கப்பட்ட MRP விலைக்கு மேல் வாடிக்கையாளர்களிடம் கூடுதல் தொகை வசூலிக்கும் சட்டவிரோத நடைமுறைக்கு உடனடி முற்றுப்புள்ளி வைக்க அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முந்தைய அதிமுக மற்றும் திமுக ஆட்சிகளில் ஒரு பாட்டிலுக்கு 10 முதல் 20 ரூபாய் வரை அதிகமாக வசூலிக்கப்பட்டதாக கூறப்பட்டு, இதன் மூலம் கோடிக்கணக்கான ரூபாய் முறைகேடான வருவாய் ஈட்டப்பட்டதாக விஜய் தேர்தல் பிரச்சாரங்களில் சாடியிருந்தார்.
தற்போது மாநிலம் முழுவதும் உள்ள 4,048 டாஸ்மாக் கடைகளில் சுமார் 1,500 முதல் 1,700 கடைகளில் இந்த தவறான வசூல் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது. சென்னை, சேலம் மற்றும் திருச்சிராப்பள்ளி மண்டலங்களில் பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், கோவை மற்றும் மதுரை மண்டலங்களில் சில சவால்கள் தொடர்கின்றன. அடுத்த மூன்று மாதங்களுக்குள் இந்த முறைகேட்டை மாநிலம் தழுவிய அளவில் 100 சதவீதம் ஒழிப்பதே அரசின் இலக்கு.
இதையும் படிங்க: "ஆடல், பாடல் கலைஞர்களுக்குக் கடுமையான ஆடைக் கட்டுப்பாடு!" – உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு!
டாஸ்மாக் ஊழியர்களின் ஊதிய உயர்வுக்கு ஏற்பாடு செய்த அரசு, இதுவரை சட்டவிரோத வசூலால் சமாளிக்கப்பட்ட கடை வாடகை மற்றும் மின்சாரக் கட்டணங்களை இனிமேல் அரசே முழுமையாக ஏற்கும் என்று உறுதியளித்துள்ளது. இதனால் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் இரு தரப்பினரும் பயனடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், தற்போது கடைகளுடன் இணைக்கப்பட்டுள்ள சாதாரண பார்களின் எண்ணிக்கையைக் குறைத்து, கர்நாடகா, கேரளா போன்ற அண்டை மாநிலங்களைப் போல உணவகங்கள் மற்றும் பார் வசதிகளுடன் கூடிய ரெஸ்ட்ரோ-பார் மாடலை அதிகரிக்க அரசு திட்டமிட்டுள்ளது. வாட் வரி அடிப்படையில் இயங்கும் இந்த புதிய அமைப்புகள் மூலம் அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும் என்று டாஸ்மாக் நிர்வாகம் மதிப்பிட்டுள்ளது.
மது பிராண்டுகளின் பன்முகத்தன்மையை அதிகரிக்கும் நோக்கில், தமிழகத்தில் உள்ள 11 உற்பத்தி ஆலைகளில் இருந்து தற்போது 8 நிறுவனங்களிடம் மட்டுமே கொள்முதல் செய்யப்படும் நிலையை மாற்ற அரசு முடிவு செய்துள்ளது. பெரும்பாலான கொள்முதல் சில குறிப்பிட்ட நிறுவனங்களிடம் (திராவிடக் கட்சிகளுடன் தொடர்புடையவை என குற்றச்சாட்டு உள்ளவை) மட்டும் இருப்பதை சரிசெய்து, பெங்களூர் உள்ளிட்ட நகரங்களில் கிடைக்கும் முன்னணி பிராண்டுகளை தமிழகத்திலும் அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகில் இருந்த 717 கடைகளை ஏற்கனவே மூடியுள்ள அரசு, 21 வயதுக்குக் குறைவானோருக்கு மது விற்பனை தடை செய்யும் கடுமையான உத்தரவையும் பிறப்பித்துள்ளது. மேலும், மது விற்பனையை முழுமையாக தனியார்மயமாக்குவது குறித்தும் ஆலோசனை நடைபெற்று வருகிறது.
இதற்காக கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களின் மாதிரிகளை ஆய்வு செய்ய கலால் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த சீர்திருத்தங்கள் மூலம் டாஸ்மாக் அமைப்பு வெளிப்படைத்தன்மை மிக்கதாக மாறும் என மக்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: தமிழகத்தில் அதிரடி ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: தலைமைச் செயலர் எம். சாய்குமார் உத்தரவு!