வெற்றி பயணம் திட்டத்தால் வந்த புதிய சிக்கல்? தனியார் பேருந்து உரிமையாளர்களின் அதிரடி கோரிக்கை!!
ஒவ்வொரு பேருந்தையும் நம்பி ஆறு பேர் வரை நேரடியாகவும், அவர்களின் குடும்பங்கள் மறைமுகமாகவும் வாழ்கின்றன.
தமிழக அரசு மகளிர் மற்றும் திருநங்கைகளுக்கு விரிவுபடுத்தியுள்ள கட்டணமில்லாப் பேருந்து திட்டம் ‘வெற்றி பயணம்’ பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அதேநேரம் தனியார் போக்குவரத்துத் துறையை நம்பி வாழும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 2 முதல் நடைமுறைக்கு வந்த இந்தத் திட்டம், ஏற்கனவே அமலில் இருந்த ‘விடியல் பயணம்’ திட்டத்தின் தொடர்ச்சியாகும். எக்ஸ்பிரஸ், டீலக்ஸ், லிமிடெட் ஸ்டாப், 40 கி.மீ.க்கு மேல் இயங்கும் புறநகர் மற்றும் மலைப்பாதை பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாகப் பயணிக்கலாம்.
வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருப்பத்தூர் ஆகிய நான்கு வட மாவட்டங்களில் மட்டும் சுமார் 484 அரசுப் பேருந்துகள் இத்திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளன. இதனால் பெரும்பாலான பயணிகள் அரசுப் பேருந்துகளையே தேர்வு செய்கின்றனர். தனியார் பேருந்துகள் காலியாகச் செல்லும் நிலை உருவாகியுள்ளது.
இதையும் படிங்க: வெற்றி பயணம் திட்டத்திற்கு தடை விதிக்க கோரி வழக்கு! சென்னை உயர்நீதிமன்றத்தில் நாளை விசாரணை!
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் வி. நல்லசிவனைச் சந்தித்த சுமார் 30 தனியார் பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் மற்றும் மெக்கானிக்குகள், தங்களின் குடும்ப வாழ்வைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்குமாறு மனு அளித்தனர். “முன்பு நாள் ஒன்றுக்கு ஏழு முதல் எட்டு டிரிப் போவோம். இப்போது இரண்டு அல்லது மூன்று டிரிப் மட்டுமே. அதிலும் பெரும்பாலும் பேருந்து காலியாகவே செல்கிறது. டீசல் செலவுகூட வசூலில் வராது. குடும்பச் செலவுகளைச் சமாளிக்க முடியாமல் தவிக்கிறோம்” என ஓட்டுநர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் மட்டும் சுமார் 110 தனியார் பேருந்துகள் இயங்குகின்றன. இவற்றில் 220-க்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள், கண்டக்டர்கள் பணிபுரிகின்றனர். பேருந்து நிலைய புரோக்கர்கள், உதிரிபாகப் பழுதுபார்ப்பவர்கள் உள்ளிட்ட மேலும் 60-க்கும் அதிகமானோர் இந்தத் தொழிலை நம்பியுள்ளனர். ஒவ்வொரு பேருந்தையும் நம்பி ஆறு பேர் வரை நேரடியாகவும், அவர்களின் குடும்பங்கள் மறைமுகமாகவும் வாழ்கின்றன.
வேலூர் மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் சில மாற்று யோசனைகளை முன்வைத்துள்ளது. அரசுப் பேருந்துகளைப் போலவே தனியார் பேருந்துகளிலும் 12 சிறப்பு இருக்கைகளை மகளிருக்காக ஒதுக்கத் தயாராக இருப்பதாகவும், அதற்கான கட்டண இழப்பீட்டை அரசு வழங்க வேண்டும் என்றும் கோருகின்றனர். மேலும், 2018-க்குப் பிறகு ஒரு கிலோமீட்டருக்கு 58 காசுகள் என்ற நிலையிலேயே நீடிக்கும் கட்டணத்தை, டீசல் மற்றும் உதிரிபாக விலை உயர்வைக் கருத்தில் கொண்டு உடனடியாக உயர்த்த வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.
ஆட்டோ ஓட்டுநர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். வேலூரைச் சேர்ந்த ஓட்டுநர் ஒருவர், “முன்பு நாள் ஒன்றுக்கு ₹1,500 முதல் ₹2,000 வரை கிடைக்கும். இப்போது ₹600-700 தான். சில நாட்களில் ₹300 மட்டுமே. ஆனால் டீசலுக்கு மட்டும் ₹700 செலவாகிறது” எனத் தெரிவித்தார்.
மகளிர் நலத்திட்டங்கள் வரவேற்கத்தக்கவை. அதேநேரம் தனியார் போக்குவரத்துத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்கும் வகையில் அரசு மாற்று வழிகளை உருவாக்க வேண்டும் என்பதே அவர்களின் எதிர்பார்ப்பு.
இதையும் படிங்க: பெண்களுக்கு ஹேப்பி நியூஸ்!! அக். 2-ல் ‘வெற்றிப் பயணம்’ திட்டம்.. தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்!!