2 நாட்கள் அடித்து ஊற்றக் காத்திருக்கும் கனமழை! நாளை 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
தமிழகத்தில் நாளை (மே 26) கோவை,திருப்பூர்,நீலகிரி,ஈரோடு,சேலம்,தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி ஆகிய 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை: தமிழகத்தில் நாளை (மே 26) கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, சேலம், தேனி, திண்டுக்கல் மற்றும் கன்னியாகுமரி ஆகிய 8 மாவட்டங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையின்படி, தென்மேற்கு வங்கக்கடல், தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் வளிமண்டல காற்றழுத்த தாழ்வு நிலவுகிறது. இதன் காரணமாக இன்று (மே 25) நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றும் தேனி மாவட்டங்களில் சில இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும்.
நாளை (மே 26) கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களின் மலைப்பகுதிகள் உள்பட நீலகிரி, ஈரோடு, சேலம், தேனி, திண்டுக்கல் மற்றும் கன்னியாகுமரி ஆகிய 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. மே 27 முதல் 29 வரை தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதையும் படிங்க: தமிழகத்தின் 19 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு! சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் நிலவும். குறிப்பாக கடலோரப் பகுதிகளில் சில இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கடல் சார்ந்த எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும். இடையிடையே 60 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீச வாய்ப்புள்ளதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்கள் மழை நீர் தேங்கும் பகுதிகளில் எச்சரிக்கையுடன் இருக்கவும், இடி மின்னல் பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றவும் வானிலை மையம் கேட்டுக் கொண்டுள்ளது. விவசாயிகள் மற்றும் பயணிகள் தங்கள் பயணத்தைத் திட்டமிடும்போது வானிலை அறிக்கையைப் பார்த்து செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தமிழகத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி! கோவை முதல் திருவண்ணாமலை வரை நாளை கனமழை எச்சரிக்கை!