10 முறை தோற்ற சேலத்துக்காரர்! எடப்பாடி பழனிசாமிக்கு தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் நேரடி சவால்!
உங்களால் சேலத்தைத் தாண்டி வேறு தொகுதியில் போட்டியிட முடியுமா? சென்னையில் இறுதிக்கட்டப் பிரச்சாரத்தில் விஜய் ஆவேசம்.
தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது. இன்று சென்னையில் நடைபெற்ற தனது இறுதிக்கட்ட வாகனப் பிரச்சாரத்தின் (Roadshow) போது, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்குத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மிகக் கடுமையான சவால் ஒன்றினை விடுத்துள்ளார்.
சமீபத்திய பேட்டிகளில் நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்து எடப்பாடி பழனிசாமி சில விமர்சனங்களை முன்வைத்திருந்தார். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய விஜய் ஏதாவது ஒரு பிரச்சனை என்றால் விஜய் வெளியே வரமாட்டார் என்று 10 முறை தேர்தலில் தோற்ற அந்தச் சேலத்துக்காரர் (எடப்பாடி பழனிசாமி) சொல்கிறார். மக்கள் பிரச்சனைகளுக்காக நான் எப்போது களத்தில் நிற்க வேண்டும் என்பது எனக்குத் தெரியும். அரசியலுக்கு வந்த முதல் நாளிலிருந்தே மக்களின் துயரங்களில் பங்கெடுத்து வருகிறேன் எனத் தெரிவித்தார்.
எடப்பாடி பழனிசாமியின் தேர்தல் பலம் குறித்துக் கேள்வி எழுப்பிய விஜய் இத்தனை ஆண்டுகள் அரசியலில் இருப்பதாகச் சொல்லும் உங்களால், உங்கள் சொந்த மாவட்டமான சேலத்தைத் தாண்டித் தமிழ்நாட்டின் வேறு ஏதாவது ஒரு தொகுதியில் நின்று வெற்றி பெற முடியுமா? நான் இன்று பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரண்டு வெவ்வேறு தொகுதிகளில் துணிச்சலோடு போட்டியிடுகிறேன். உங்களுக்கு அந்தத் துணிச்சல் இருக்கிறதா?" என நேரடிச் சவால் விடுத்தார்.
இதையும் படிங்க: காரைக்குடியில் சீமான் ரோடு ஷோ..! தொண்டர்கள் உற்சாக வரவேற்பு..!!
தமிழகத்தில் நீண்டகாலமாக ஆட்சி செய்து வரும் திராவிடக் கட்சிகள் மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தவறிவிட்டதாக அவர் குற்றம் சாட்டினார். அதிமுக மற்றும் திமுக ஆகிய இரண்டுமே மக்களின் நலனை விடத் தங்களது அதிகாரத்தையே பெரிதாக நினைக்கின்றன. இந்த இரண்டு தீய சக்திகளுக்கும் மக்கள் இந்தத் தேர்தலில் முற்றுப்புள்ளி வைப்பார்கள்" எனத் தெரிவித்தார்.
சென்னை பாலவாக்கம் மற்றும் திருவான்மியூர் பகுதிகளில் ஆயிரக்கணக்கான தொண்டர்களிடையே உரையாற்றிய விஜய், ஏப்ரல் 23-ஆம் தேதி மக்கள் புதிய மாற்றத்திற்காகத் தமிழக வெற்றிக் கழகத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
நாளை மறுதினம் நடைபெறவுள்ள வாக்குப்பதிவில் விஜய்யின் இந்த நேரடி அரசியல் மோதல் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: விடிந்ததுமே களத்தில் இறங்கிய மு.க.ஸ்டாலின்... வேளச்சேரி, சோழிங்கநல்லூரில் “வாக்கிங்” பிரசாரம்...!