×
 

திருவண்ணாமலையில் அதிர்ச்சி: வாக்குப்பதிவு இயந்திரத்தை உடைத்த வேட்பாளரின் ஏஜென்ட்!

கலசப்பாக்கம் அருகே பரபரப்பு; வாக்குப்பதிவு நிறுத்தம்; 208 வாக்குகள் பதிவான நிலையில் வன்முறை.

தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு மாநிலம் முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதியில் வாக்குப்பதிவு இயந்திரம் (EVM) உடைக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுயேச்சை வேட்பாளர் ஒருவரின் ஏஜென்ட் இந்த அநாகரீகச் செயலில் ஈடுபட்டதால் அந்த வாக்குச்சாவடியில் தேர்தல் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

கலசப்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட கீழ்பாலூர் பகுதியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் இன்று காலை முதலே பொதுமக்கள் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வந்தனர். அப்போது அங்கு பணியில் இருந்த சுயேச்சை வேட்பாளர் ஒருவரின் ஏஜென்ட், திடீரென ஆக்ரோஷமாகச் செயல்பட்டு அங்கிருந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தைத் தூக்கி எறிந்து உடைத்தார். ஏஜென்ட்டுக்கும் அங்கிருந்த தேர்தல் அதிகாரிகளுக்கும் இடையே ஏற்பட்ட சிறு வாக்குவாதம் இந்த மோதலுக்குக் காரணமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

அந்த வாக்குச்சாவடியில் வன்முறை வெடிப்பதற்கு முன்பு வரை, மொத்தம் 208 வாக்குகள் பதிவாகியிருந்தன. இயந்திரம் சேதமடைந்ததைத் தொடர்ந்து, பதிவான வாக்குகளின் ரகசியத்தன்மை மற்றும் பாதுகாப்பு குறித்துக் கேள்வி எழுந்துள்ளது. சம்பவம் குறித்துத் தகவல் அறிந்ததும், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். வாக்குப்பதிவு இயந்திரத்தை உடைத்த அந்த ஏஜென்ட்டை போலீஸார் உடனடியாகக் கைது செய்து ரகசிய இடத்திற்கு அழைத்துச் சென்றனர். கீழ்பாலூர் பகுதியில் பதற்றம் நிலவுவதால் கூடுதல் போலீஸார் மற்றும் துணை ராணுவப் படையினர் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: வாக்காளர் அட்டை இல்லையா? இந்த 12 ஆதாரங்கள் போதுமே?! இந்த ஆவணங்களை காட்டி ஓட்டு போடலாம்!!

அமைதியான முறையில் நடைபெற்று வரும் இந்த ஜனநாயகத் திருவிழாவில், இதுபோன்ற வன்முறைச் சம்பவங்கள் வாக்காளர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: அலுவலகத்திற்குள் அதிரடி ரெய்டு... கையும், களவுமாய் சிக்கிய அமமுக வேட்பாளர்... கட்டுக்கட்டாய் பணம் பறிமுதல்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share