×
 

தேர்தல் களம்: வேட்புமனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாள்! மாலை 3 மணியுடன் அவகாசம் முடிகிறது!

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் சேர்த்து இதுவரை மொத்தம் 3,141 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர்.

தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுக்களைத் தாக்கல் செய்ய நாளை (ஏப்ரல் 06) இறுதி நாளாகும். நாளை மாலை 3 மணியுடன் மனுத்தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நிறைவடைவதால், தேர்தல் களம் உச்சகட்டப் பரபரப்பை எட்டியுள்ளது.

கடந்த மார்ச் மாதம் தொடங்கிய வேட்புமனுத் தாக்கல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நாளை மாலை சரியாக 3 மணிக்குள் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் மனுக்களை ஒப்படைக்க வேண்டும். 3 மணிக்கு மேல் வருபவர்களுக்கு அனுமதி வழங்கப்படாது என்பதால், முக்கிய அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் நாளை காலை முதலே தங்களது ஆதரவாளர்களுடன் திரளாக வந்து மனுத்தாக்கல் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் சேர்த்து இதுவரை மொத்தம் 3,141 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர். இதில் ஆளும் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி மற்றும் பாஜக கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் மட்டுமின்றி, ஏராளமான சுயேச்சை வேட்பாளர்களும் களம் இறங்கியுள்ளனர். குறிப்பாக, கடந்த சில நாட்களாகக் கொட்டும் மழையிலும் பல வேட்பாளர்கள் ஆர்வத்துடன் வந்து மனுத்தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தவெக விஜய் மீது 2 குற்ற வழக்குகள்.. திருச்சி கிழக்கு வேட்புமனுவில் பரபரப்புத் தகவல்!

தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை (Scrutiny) ஏப்ரல் 07 அன்று நடைபெறும். இதில் விதிமுறைகளுக்கு உட்பட்டுச் சரியாக இல்லாத மனுக்கள் தள்ளுபடி செய்யப்படும். ஏப்ரல் 09 வேட்புமனுக்களைத் திரும்பப் பெறக் கடைசி நாள். அன்றைய தினம் மாலை 5 மணிக்கு மேல் அந்தந்த தொகுதிகளுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், வேட்புமனுத் தாக்கல் முடியும் நாளிலிருந்து தேர்தல் பிரசாரம் இன்னும் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: வேட்புமனுக்கள் நிராகரிக்கப்படலாம், எச்சரிக்கை! மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி அதிரடி அறிவுறுத்தல்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share