×
 

குரூப் 2, 2ஏ தேர்வுகள் நவம்பர் 1-ல் நடைபெறும்! TNPSC அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!

TNPSC குரூப்-2, 2ஏ முதல் நிலைத் தேர்வு நவம்பர் 1-இல் நடைபெறும் என தேர்வாணையம் அறிவித்துள்ளது.

ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-II (தொகுதி 2 மற்றும் 2ஏ பணிகள்) - 2026-க்கான அதிகாரப்பூர்வத் தேர்வு அறிவிக்கையைத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) இன்று (11.08.2026) வெளியிட்டுள்ளது.

தேர்வாணையத்தின் ஆண்டுத் திட்டத்தில் (Annual Planner) குறிப்பிட்டபடி வெளியாகி உள்ள இந்த அறிவிக்கையின்படி, முதல் நிலைத் தேர்வு (Preliminary Exam) வரும் நவம்பர் 1-ஆம் தேதி (01.11.2026) நடைபெறும் எனத் தேர்வாணையச் செயலாளர் திரு. பானோத் ம்ருகேந்தர் லால், இ.ஆ.ப. அவர்கள் தெரிவித்துள்ளார்.

தேர்வாணையத்தின் ஆண்டுத் திட்டத்தில் (Annual Planner) குறிப்பிட்டபடி, குரூப்-2 மற்றும் குரூப்-2ஏ பணிகளுக்கான ஒருங்கிணைந்த அறிவிக்கை இன்று (11.08.2026) வெளியிடப்பட்டுள்ளது. தகுதியுடைய தேர்வர்கள் இன்று (11.08.2026) முதல் செப்டம்பர் 09, 2026 மாலை வரை இணையவழியில் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம். மேலும், தேர்வர்கள் தங்களது தேர்வுக் கட்டணத்தை யுபிஐ (UPI) மூலமாகவும் சுலபமாகச் செலுத்தலாம். இத் தேர்வுகளுக்கான முதல் நிலைத் தேர்வு (Preliminary Exam) வரும் 01.11.2026 அன்று நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழிலாளர் நலத் துறையில் உதவி ஆய்வாளர், தமிழ்நாடு வணிகவரித் துறையில் துணை வணிகவரி அதிகாரி, வேலைவாய்ப்புத் துறையில் இளநிலை உதவி அலுவலர், சார் பதிவாளர் தொகுதி-2, சிறைத் துறை ஜெயிலர் உள்ளிட்ட 14 வகையான பதவிகளில் காலியாக உள்ள 41 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

பால்வளத் துறையில் மூத்த ஆய்வாளர், கூட்டுறவுத் துறையில் மூத்த ஆய்வாளர், அமைச்சகப் பணியில் தணிக்கை ஆய்வாளர், கைத்தறித் துறையில் கைத்தறி ஆய்வாளர், அமைச்சகப் பணி உதவியாளர், இந்து சமய அறநிலையத் துறை செயல் அலுவலர் (Executive Officer), தமிழ்நாடு மீன்வளத் துறையில் இளநிலை உதவியாளர், தலைமைச் செயலகத்தில் உதவியாளர் மற்றும் சட்டப்பேரவையில் எழுத்தர் (Clerk) உள்ளிட்ட 44 வகையான பதவிகளில் காலியாக உள்ள 780 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

கடந்த ஆண்டு 828 பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டு மொத்தம் 821 பணியிடங்களுக்கான அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share