×
 

$300 பில்லியன் மதிப்பு: அமெரிக்காவில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்..!! ரிலையன்ஸ் உடன் கைகோர்த்த டிரம்ப்..!!

அமெரிக்காவில் முதல் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட உள்ளது என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

அமெரிக்காவில் அரை நூற்றாண்டுக்குப் பிறகு புதிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட உள்ளது. அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். டெக்சாஸ் மாநிலத்தின் பிரவுன்ஸ்வில் துறைமுகப் பகுதியில் இந்த பிரம்மாண்ட திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இதில் இந்தியாவின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் முக்கிய பங்காளியாக இணைந்துள்ளது.

கடந்த 50 ஆண்டுகளில் அமெரிக்காவில் புதிதாக அமைக்கப்படும் முதல் பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் இதுவாகும் என்று டிரம்ப் தனது 'ட்ரூத் சோஷியல்' தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த திட்டத்தை "அமெரிக்க வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு பெரிய ஒப்பந்தம்" என்று அவர் விவரித்துள்ளார். மொத்த மதிப்பு சுமார் 300 பில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் தோராயமாக ரூ.25 லட்சம் கோடி) எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது அமெரிக்காவின் எரிசக்தி உற்பத்தியை பெருமளவு உயர்த்தும், தேசிய பாதுகாப்பை வலுப்படுத்தும், பில்லியன் கணக்கான டாலர்கள் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், இந்த சுத்திகரிப்பு நிலையம் உலகிலேயே மிகவும் சுற்றுச்சூழல் நட்பு மிக்கதாக (cleanest refinery in the world) இருக்கும் என்று டிரம்ப் பெருமிதம் தெரிவித்துள்ளார். அமெரிக்க சந்தையின் தேவைகளைப் பூர்த்தி செய்வதோடு, ஏற்றுமதியையும் அதிகரிக்கும். தென் டெக்சாஸ் பகுதியில் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: ஈரான் மீது தாக்குதல் தொடங்கியாச்சு.. வீடியோ மூலம் வார்னிங் கொடுத்த டிரம்ப்.. ஷாக்கில் உலக நாடுகள்..!!

இந்த திட்டத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்களிப்பை சிறப்பாகக் குறிப்பிட்டுள்ள டிரம்ப், "இந்தியாவில் உள்ள எங்களது கூட்டாளிகளுக்கும், அங்குள்ள மிகப்பெரிய தனியார் எரிசக்தி நிறுவனமான ரிலையன்ஸுக்கும் இந்த மகத்தான முதலீட்டிற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார். முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ், ஏற்கனவே குஜராத்தின் ஜாம்நகரில் உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை நடத்தி வருகிறது.

இப்போது அமெரிக்காவில் கால் பதிக்கும் இந்த முயற்சி, இரு நாடுகளுக்கும் இடையிலான எரிசக்தி ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும். ஈரான் மீதான போர் பதற்றம் காரணமாக உலக அளவில் கச்சா எண்ணெய் விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவின் உள்நாட்டு எரிசக்தி உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் வெளிநாட்டு இறக்குமதியை குறைக்கும் 'அமெரிக்கா முதலில்' கொள்கையை இது மேலும் வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்தத் திட்டத்தின் கட்டுமானப் பணிகள் 2026-ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் எரிசக்தி துறையில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் இந்த முயற்சி, உலக அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.

இதையும் படிங்க: மீண்டும் ஆரம்பித்த டிரம்ப்..!! இந்திய பொருளுக்கு 126% வரியாம்..!! ஏற்றுமதியாளர்கள் ஷாக்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share