×
 

8 பெண்களை விடுதலை செய்யுங்கள்! ஈரானுக்கு அதிபர் டிரம்ப் வலியுறுத்தல்!

தீங்கு ஏதும் இழைக்காமல் அப்பெண்களை விடுவிப்பது ஈரானுடனான பேச்சுவார்த்தைக்கு மிகச்சிறந்த தொடக்கமாக அமையும் என டொனால்ட் டிரம்ப் வலியுறுத்தல்.

ஈரானில் மரண தண்டனையை எதிர்நோக்கியிருப்பதாகக் கூறப்படும் 8 பெண்களை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்யுமாறு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று ஈரானியத் தலைவர்களுக்கு நேரடி வேண்டுகோள் விடுத்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையே இஸ்லாமாபாத்தில் நடைபெறவுள்ள இரண்டாம் கட்ட அமைதிப் பேச்சுவார்த்தைக்கு முன்னதாக, இந்த நடவடிக்கை ஒரு நம்பிக்கையூட்டும் தொடக்கமாக அமையும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனது 'ட்ரூத் சோஷியல்' (Truth Social) தளத்தில் அதிபர் டிரம்ப் பதிவிட்டுள்ளதாவது. விரைவில் எனது பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ள ஈரானியத் தலைவர்களே மரண தண்டனையை எதிர்கொண்டுள்ள இந்த 8 பெண்களை நீங்கள் விடுதலை செய்தால் நான் மிகவும் மதிப்பேன். தயவுசெய்து அவர்களுக்குத் தீங்கு ஏதும் இழைக்காதீர்கள்! இது நமது பேச்சுவார்த்தைக்கு ஒரு மிகச்சிறந்த தொடக்கமாக (Great start) அமையும் என அவர் தெரிவித்துள்ளார்.

சமூக வலைதள ஆர்வலர் எயால் யாகோபி (Eyal Yakoby) என்பவர், ஈரானில் 8 பெண்களுக்கு விரைவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளதாக அவர்களின் புகைப்படங்களுடன் ஒரு செய்தியைப் பகிர்ந்திருந்தார். இந்தச் செய்தியை மேற்கோள் காட்டியே அதிபர் டிரம்ப் தனது வேண்டுகோளை விடுத்துள்ளார். இருப்பினும், ஈரானியத் தரப்பிலிருந்து இந்த மரண தண்டனை குறித்த அதிகாரப்பூர்வத் தகவல்கள் ஏதும் இதுவரை வெளியாகவில்லை.

இதையும் படிங்க: US Freedom250: டெல்லியில் தொடங்கிய கொண்டாட்டம்..!! டிரம்ப் ஃபோட்டோவுடன் வலம் வரும் ஆட்டோக்கள்..!!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான தற்காலிகப் போர்நிறுத்தம் நாளை (ஏப்ரல் 22) இரவுடன் முடிவடைய உள்ள நிலையில், இஸ்லாமாபாத்தில் புதிய கட்டப் பேச்சுவார்த்தைகள் திட்டமிடப்பட்டுள்ளன. அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ், தூதர்கள் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ஜாரெட் குஷ்னர் ஆகியோர் பாகிஸ்தானுக்குப் பயணம் மேற்கொள்ள உள்ளனர். ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது மற்றும் பிராந்தியத்தில் நிரந்தர அமைதியை ஏற்படுத்துவது குறித்து இந்தப் பேச்சுவார்த்தையில் ஆலோசிக்கப்பட உள்ளது.

ஈரான் பலமுறை போர்நிறுத்த விதிகளை மீறியுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ள டிரம்ப், பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் இல்லையெனில் போர்நிறுத்தத்தை நீட்டிக்க வாய்ப்பில்லை என்றும் எச்சரித்துள்ளார். எங்களிடம் அதிக நேரமில்லை, ஈரான் பேச்சுவார்த்தை மேசைக்கு வர வேண்டும்" என அவர் சிஎன்பிசி (CNBC) பேட்டியில் தெரிவித்துள்ளார்.

அதிபர் டிரம்பின் இந்த மனிதாபிமான வேண்டுகோள் ஈரானின் பிடிவாதத்தைக் குறைக்குமா அல்லது இராஜதந்திர அழுத்தமாக மாறுமா என்பது அடுத்த சில நாட்களில் தெரியவரும்.

இதையும் படிங்க: இயேசுவை அவமதிப்பதா..?? இதை ஏற்றுக்கொள்ளவே முடியாது..!! டிரம்புக்கு எதிராக கொந்தளித்த ஈரான் அதிபர்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share