தவெகவை வீழத்த திமுக - அதிமுக இணைவதில் தவறில்லை!! விஜய் பண்ணது மட்டும் நியாயமா? டிடிவி தினகரன் கேள்வி!
விஜயகாந்தோடு, முதலமைச்சர் விஜயை தயவு செய்து ஒப்பிட வேண்டாம். சினிமாவில் நடித்ததோடு சரி. பொது வெளியில் நடிக்கமாட்டார் என டி.டி.வி. தினகரன் கூறினார்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், முதலமைச்சர் விஜயை கடுமையாக விமர்சித்துள்ளார். "விஜயகாந்துடன் முதலமைச்சர் விஜயை ஒப்பிட வேண்டாம். விஜயகாந்த் சினிமாவில் மட்டுமே நடித்தார்; பொது வாழ்க்கையில் நடிக்கவில்லை" என்ற அவரது கருத்து அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய டி.டி.வி. தினகரன், கரூர் சம்பவம் தொடர்பாக முதலமைச்சர் விஜய் தெரிவித்த கருத்துகள் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடைபெற்று வருவதாகவும், உண்மை விரைவில் வெளிச்சத்திற்கு வரும் என்றும் கூறினார். கரூர் துயரச் சம்பவத்திற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். அரசு அறிவித்த வேலைவாய்ப்பு, பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நீதி கிடைத்ததாக கருத முடியாது என்றும் அவர் விமர்சித்தார்.
முதலமைச்சர் விஜயின் அரசியல் நடைமுறைகளையும் தினகரன் சாடினார். சினிமா கவர்ச்சியால் ஆட்சிக்கு வந்தவர் என்ற விமர்சனத்திற்கு முதலமைச்சர் கோபப்படுவதாகவும், அவரது பேச்சு மற்றும் உடல்மொழி பொதுமக்களுக்கு திரைப்படக் காட்சியை நினைவுபடுத்துவதாகவும் அவர் கூறினார். கரூர் நிகழ்ச்சியில் கருப்பு சட்டை அணிந்து சென்றிருந்தாலும், அவரது பேச்சிலும் உடல்மொழியிலும் துக்க உணர்வு வெளிப்படவில்லை என்றும் தினகரன் குற்றம்சாட்டினார்.
இதையும் படிங்க: அதிமுகவில் தினகரனை சேருங்கள்!! அண்ணாமலையுடன் சேர்ந்து பயணியுங்கள்! எடப்பாடிக்கு குவியும் அட்வைஸ்!
மேலும், தற்போதைய தமிழக அரசு தி.மு.க. கூட்டணியில் வெற்றி பெற்ற கட்சிகளின் ஆதரவோடு ஆட்சியை அமைத்துள்ளதாகவும், இதனை மறுக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார். காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் ஆதரவு காரணமாகவே அரசு அமைந்துள்ளதாக அவர் கூறினார். ஆறு எம்.எல்.ஏ.க்கள் பதவி விலகி ஆட்சிக்கு ஆதரவளித்ததையும் அவர் விமர்சித்தார்.
அரசியல் சூழ்நிலைகள் மாறினால் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. இணைந்து செயல்படுவதற்கும் வாய்ப்பு இருக்கலாம் என்றும் தினகரன் கருத்து தெரிவித்தார். கடந்த காலங்களில் அண்ணா மற்றும் ராஜாஜி போன்ற எதிர்துருவ தலைவர்களும் இணைந்து செயல்பட்டதை நினைவுபடுத்திய அவர், அரசியலில் நிரந்தர எதிரிகளோ அல்லது நண்பர்களோ இல்லை என்றார்.
இறுதியாக, விஜயகாந்தின் பொது வாழ்க்கையை எடுத்துக்காட்டிய தினகரன், "விஜயகாந்தை முதலமைச்சர் விஜயுடன் ஒப்பிடுவது சரியல்ல. சினிமாவில் நடித்ததோடு அவர் நின்றார்; பொது வாழ்க்கையில் நடிப்பை வெளிப்படுத்தவில்லை" என்று கூறியுள்ளார். தினகரனின் இந்தக் கருத்துகள் தமிழக அரசியலில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.
இதையும் படிங்க: திருச்சி கிழக்கில் களமிறங்கும் முதல்வர் விஜய்யின் நிழல்!! ஜான் ஆரோக்கியசாமிக்கு அடிச்சது லக்!