“திமுக பக்கம் திரும்புமா அ.ம.மு.க பார்வை?” - திருச்சியில் டி.டி.வி. தினகரன் சஸ்பென்ஸ்!
கூட்டணி விவகாரத்தில் யாருடைய அழுத்தங்களுக்கும் அடிபணியப் போவதில்லை என்று டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.
சட்டமன்றத் தேர்தலுக்கான அரசியல் சதுரங்க ஆட்டம் சூடுபிடித்துள்ள நிலையில், அ.ம.மு.க-வின் கூட்டணி நிலைப்பாடு குறித்துத் திருச்சியில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் அளித்துள்ள பேட்டி அரசியல் வட்டாரத்தில் புதிய விவாதங்களைக் கிளப்பியுள்ளது. யார் பக்கம் உங்கள் பார்வை திரும்பும் என்ற கேள்விக்கு, அவர் அளித்த சூசகமான பதில்களும், கூட்டணி குறித்த அழுத்தங்களுக்குத் தான் அடிபணியப் போவதில்லை என்ற அவரது தெளிவான நிலைப்பாடும் அ.ம.மு.க தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல் மற்றும் கூட்டணி வியூகங்கள் குறித்து வெளிப்படையாகப் பேசினார். அப்போது அவரிடம், "உங்கள் பார்வை திமுக பக்கம் திரும்புமா?" என்ற நேரடியான கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், “எங்கள் பார்வை யார் பக்கம் திரும்பும் என்பதை இப்போதே சொல்லிவிட முடியாது, பொறுத்திருந்து பாருங்கள்” என ஒரு பெரிய ‘சஸ்பென்ஸ்’ வைத்துப் பதிலளித்தார்.
தொடர்ந்து கூட்டணி குறித்த கேள்விகளுக்குப் பதிலளித்த தினகரன், “கூட்டணி நிலைப்பாடு குறித்து அ.ம.மு.க இன்னும் எந்த இறுதி முடிவையும் எடுக்கவில்லை. முதலில் எங்களது தொண்டர்களின் மனநிலையை அறிய வேண்டும். அதன் பிறகு மற்ற கூட்டணிகளின் நிலைப்பாடுகளை ஆழமாக ஆராய்ந்து விட்டுத் தான் எங்கள் முடிவை அறிவிப்போம்” என்று நிதானமாகத் தெரிவித்தார். மேலும், கூட்டணி அமைப்பது தொடர்பாகத் தங்களுக்குப் பல்வேறு முனைகளிலிருந்து அழுத்தங்கள் வருகிறதா என்ற கேள்விக்கு, “எங்களுக்கு யாரும் அழுத்தம் கொடுக்கவில்லை. ஒருவேளை அழுத்தம் கொடுத்து ஒரு தலைவரை வேண்டுமானால் வழிக்குக் கொண்டு வரலாம்; ஆனால், ஒருபோதும் தொண்டர்களை எதற்கும் பணிய வைக்க முடியாது” எனத் தன்மானத்தோடு குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: "விஜய் ஒருத்தரால தான் முடியும்!" அதிமுக டூ தவெக.. மொத்தமா களமிறங்கும் புள்ளிகள்!
மிக முக்கியமாக, பெரிய கட்சிகளுடனான கூட்டணி குறித்துப் பேசுகையில், “எவ்வளவு பெரிய கட்சியாக இருந்தாலும் சரி, எங்களை அன்போடும் மரியாதையோடும் அழைத்தால் மட்டுமே அ.ம.மு.க கூட்டணியில் இணையும்” எனத் தனது நிபந்தனையை அதிரடியாக முன்வைத்தார். தினகரனின் இந்தப் பேச்சு, திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு துருவங்களுமே அவரைத் தங்கள் பக்கம் இழுக்க முயற்சி செய்து வரும் சூழலில், அவர் தனது கோரிக்கையை அதிகரித்துள்ளதைக் காட்டுவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். திருச்சியில் தினகரன் கொடுத்த இந்தப் பேட்டி, வரும் நாட்களில் தமிழக அரசியலில் பல புதிய திருப்பங்களுக்கு வித்திடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: “பாஜகவிடம் மண்டியிடும் எடப்பாடி.. அதிமுக டெபாசிட் காலியாகும்!” - வெளுத்து வாங்கிய பெங்களூரு புகழேந்தி!