நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகிறது! தவெக அரசுக்கு டிடிவி தினகரன் கண்டனம்!
தஞ்சாவூர் திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் நெல் மூட்டைகள் தேங்கிக் கிடப்பதற்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் லட்சக்கணக்கான நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படாமல் தேங்கிக் கிடப்பதற்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகளைச் சுட்டிக்காட்டி தவெக அரசின் நிர்வாகச் சீர்கேட்டைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இயற்கையின் சவால்களையும், இடர்பாடுகளையும் எதிர்கொண்டு மக்களின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யும் விவசாயிகள், அரும்பாடுபட்டு விளைவித்த நெல்லை உரிய நேரத்தில் கொள்முதல் செய்யாமல் அரசு நிர்வாகம் காலம் தாழ்த்தி வருகிறது. அவ்வப்போது பெய்யும் மழையில் நெல் மூட்டைகள் நனைந்து வீணாவதற்கு இந்த அலட்சியமே அடிப்படை காரணம்.
இதையும் படிங்க: வருவாயை விட மக்கள் நலனே முக்கியம்! டாஸ்மாக் ஆன்லைன் முன்பதிவு திட்டத்திற்கு டிடிவி தினகரன் கண்டனம்!
விவசாயப் பெருமக்களின் உழைப்பை மதித்து நெல்லை உடனடியாகக் கொள்முதல் செய்ய வேண்டிய அரசு, நெல் மூட்டைகளைக் கிடங்குகளுக்கு ஏற்றிச் செல்ல வாகனங்கள் இல்லை எனக் கூறி விவசாயிகளை அலைக்கழிப்பது கடும் கண்டனத்திற்குரியது.
காவிரி நீர் பற்றாக்குறை, கடுமையான வறட்சி, பயிர்க்கடன் தள்ளுபடியில் ஏமாற்றம், பொய்த்துப்போன குறுவை சாகுபடி ஆகியவற்றால் உணவு உற்பத்தி குறைந்து அரிசி விலையும் உயர்ந்து வருகிறது. இந்தச் சூழலில், விவசாயிகள் விளைவித்த நெல்லைக்கூட உடனடியாகக் கொள்முதல் செய்ய முடியாதது தவெக அரசின் நிர்வாகத் திறமையின்மையை வெளிப்படுத்துகிறது.
தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதல் நிலையங்களில் தேங்கிக் கிடக்கும் நெல் மூட்டைகள் அனைத்தையும் உடனடியாகக் கொள்முதல் செய்வதோடு, அவற்றை முறைப்படி கிடங்குகளுக்கும், அரவை ஆலைகளுக்கும் அனுப்பி வைப்பதை அரசு உடனடியாக உறுதி செய்ய வேண்டும் என டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: முதல்வர் விஜய் அமைச்சரவையில் புதிய முகம்? ராகுல்காந்தி ஆதரவுடன் பிரவீன் சக்ரவர்த்தி அடுத்த ‘பிளான்’!