தொடரும் மின்வெட்டு..! தத்தளிக்கும் தமிழகம்... வலுக்கும் கண்டனம்..! கொந்தளித்த TTV.!!.
தொடர் மின்வெட்டு பிரச்சனையால் அவதி அடைவதாக கண்டனங்கள் வலுத்து வருகின்றன.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தமிழகத்தில் தொடரும் அறிவிக்கப்படாத மின்வெட்டுகள் குறித்து கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தவெக ஆட்சி அமைத்து 120 நாட்களைக் கடந்தும் தொடரும் இந்த மின்வெட்டால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருவதாக அவர் சுட்டிக்காட்டினார். வீண் விதண்டாவாதப் பேச்சுகளின் மூலம் மக்களை மடைமாற்றுவதை விட்டுவிட்டு, எரிசக்தி துறையை மேம்படுத்துவதில் தவெக அரசு கவனம் செலுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
தலைநகர் சென்னையில் தொடங்கி தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் அடிக்கடி ஏற்படும் அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டைக் கண்டித்து பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. குறிப்பாக இரவு நேரங்களில் அதிகளவில் ஏற்படும் இந்த மின்வெட்டால் பச்சிளம் குழந்தைகள் தொடங்கி பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர்கள், முதியவர்கள் என அனைத்து தரப்பினரும் தங்களின் தூக்கத்தைத் தொலைத்து கடும் இன்னல்களுக்கு உள்ளாகி வருகின்றனர் என தினகரன் குறிப்பிட்டார்.
மக்களின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றான மின்சாரத்தைத் தடையின்றி வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய துறை சார்ந்த அமைச்சர், மக்களை மடைமாற்றும் விதமாக முடிந்து போன கதைகளையும் காலம் கடந்த குற்றச்சாட்டுகளையும் தோண்டி எடுத்து சர்ச்சைக்குரிய வகையில் பேசுவதிலேயே முழு கவனத்தையும் செலுத்தி வருவதாக அவர் குற்றம்சாட்டினார். இதனால் ஒட்டுமொத்த எரிசக்தி துறையும் பாழாக்கப்பட்டு வருவது கடும் கண்டனத்திற்குரியது என தினகரன் தெரிவித்தார்.மின்சாரத்தை உற்பத்தி செய்து அதனைத் தடையின்றி விநியோகிக்க வேண்டிய தவெக அரசு, அதற்கு மாறாக அறிவிக்கப்படாத மின்வெட்டுகளையும் கூடுதல் மின்கட்டணச் சுமையையும் ஏற்படுத்தி வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இதையும் படிங்க: ஹெட்மாஸ்டர் தலையில் சுமை... வெட்ட வெளிச்சமாச்சு...! TTV தினகரன் விளாசல்..!!
தனது திறனற்ற நிர்வாகத்தை மறைக்க ஏழை, எளிய விளிம்புநிலைப் பொதுமக்களை வாட்டி வதைப்பது ஏற்புடையதல்ல என அவர் வலியுறுத்தினார்.எனவே தமிழகத்தில் நிலவும் அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டுகளைத் தடுத்து நிறுத்துவதோடு, பொதுமக்களுக்கு 24 மணி நேரமும் தடையற்ற மின்சாரம் வழங்கப்படுவதை உறுதி செய்திட வேண்டும் என எரிசக்தி துறையையும் தமிழ்நாடு அரசையும் தினகரன் வலியுறுத்தினார். மக்களின் அன்றாட வாழ்வில் மின்சாரம் இன்றியமையாததாக உள்ள நிலையில், அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து நிலைமையை சீர்செய்ய வேண்டும் என்பதே அவரது கோரிக்கையாகும்.
இதையும் படிங்க: “சினிமாவில் ஹீரோ... நிஜத்தில் வில்லன்...” - சி.எம்.விஜயை விளாசித் தள்ளிய டிடிவி தினகரன்...!