சிவகங்கையில் பெண் காவல் உதவியாளர் மீது தாக்குதல்.. முதலமைச்சர் வெட்கி தலை குனிய வேண்டும்... டிடிவி தினகரன் சாடல்!
சிவகங்கையில் காவல் நிலையத்திற்குள் புகுந்து கா பெண் காவல் ஆய்வாளரை தாக்கிய விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டி அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
சிவகங்கை மாவட்டம் சோமநாதபுரம் காவல் நிலையத்திற்குள் அத்துமீறி பெண் காவல் ஆய்வாளரை தாக்கிய சம்பவம் மாநில முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையிலும், சம்பந்தப்பட்டவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், சிவகங்கை மாவட்டம் சோமநாதபுரம் காவல்நிலையத்திற்குள் அத்துமீறி நுழைந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த சிலர், அங்கிருந்த பெண் காவல் ஆய்வாளர் மீது தாக்குதல் நடத்தியிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன.
காவல்நிலையத்திற்குள் புகுந்து பணியிலிருக்கும் பெண் காவல் ஆய்வாளர் ஒருவர் மீது நடைபெற்றிருக்கும் இந்த தாக்குதல் சம்பவத்திற்கு காவல்துறையை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் வெட்கித் தலைகுனிய வேண்டும்.
இதையும் படிங்க: காட்டுப்பன்றி என நினைத்து நண்பனை சுட்டுக்கொன்ற கிராமவாசிகள்..! காட்டிலேயே உடலை மறைத்த கொடூரம்
பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்கி வரும் பணியில் ஈடுபட்டுள்ள தன் மகளுக்கு காவல்நிலையத்திலேயே பாதுகாப்பில்லை எனக்கூறி கதறி அழும் பாதிக்கப்பட்ட பெண் காவல் உதவி ஆய்வாளரின் தாய்க்கு காவல்துறை என்ன பதில் சொல்லப் போகிறது ?
தன்னை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டப்பட்டதாக பெண் காவல் உயர் அதிகாரி ஒருவர் அளித்த புகார் ஏற்படுத்திய பரபரப்பு அடங்குவதற்குள்ளாகவே காவல்நிலையத்திற்குள் பெண் காவல் ஆய்வாளர் மீது நடைபெற்றிருக்கும் தாக்குதல் தமிழக காவல்துறையில் பணியாற்றும் பெண் காவலர்களுக்கு துளியளவும் பாதுகாப்பில்லை என்பதையே தெளிவுபடுத்துகிறது.
எனவே, சிவகங்கையில் காவல்நிலையத்திற்குள் புகுந்து பெண் காவல் ஆய்வாளரை தாக்கிய விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, மக்களை காக்கும் நோக்கில் காவல்துறையை தேர்ந்தெடுத்து பணியாற்றி வரும் பெண் காவலர்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும் என முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன் என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தந்தையை அடித்தே கொன்ற அன்பு மகன்..! பரிதாபமாக உயிரிழந்த போலீஸ் எஸ்ஐ.. சென்னையில் பரபரப்பு