விஜயின் பெரம்பூர் வேட்பு மனு சர்ச்சை...! திருத்தப்பட்ட பிரமாண பத்திரம் தாக்கல்..!!
பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் விஜயின் திருத்தப்பட்ட வேட்பு மனு பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலில் சென்னை பெரம்பூர் தொகுதியிலிருந்து போட்டியிடுவதற்காக மார்ச் 30 அன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவில் அவர் மீதான குற்ற வழக்குகள் தொடர்பான விவரங்களை முழுமையாகத் தெரிவிக்கவில்லை என்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில், ஏப்ரல் 2 அன்று திருச்சி கிழக்கு தொகுதிக்காக தாக்கல் செய்த வேட்பு மனுவில் தன் மீது இரு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வேறுபாடு காரணமாக பெரம்பூர் தொகுதி வேட்பு மனு நிராகரிக்கப்படும் வாய்ப்பு உள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.பெரம்பூர் வேட்பு மனுவில் விஜய் தன்மீது எந்தக் குற்ற வழக்கும் இல்லை என்று குறிப்பிட்டிருந்த நிலையில், திருச்சி கிழக்கு மனுவில் இரண்டு வழக்குகளை அவர் வெளிப்படையாகத் தெரிவித்தார். அவற்றில் ஒன்று மார்ச் 30 அன்று பெரம்பூர் பரப்புரையின்போது போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாகப் பதிவான வழக்கு.
மற்றொன்று 2025 ஆகஸ்ட் மாதம் மதுரையில் நடைபெற்ற த.வெ.க மாநாட்டின்போது ஏற்பட்ட சம்பவம் தொடர்பானது. மதுரை வழக்கில், மாநாட்டு மேடையில் விஜய்யைப் பார்த்ததும் ஆர்வத்தில் ஒரு புகார்தாரர் மேடைக்கு ஏறியதாகவும், அப்போது அவரை இடித்துத் தள்ளியதில் நெஞ்சு மற்றும் உள்காயம் ஏற்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த வழக்கு மதுரை கூடக்கோவில் காவல் நிலையத்தில் பதிவாகியுள்ளது.
இதையும் படிங்க: ஒருவிரல் புரட்சி… விசில் அடிக்க ரெடியா..? புதுவைக்கு மாஸ் வாக்குறுதிகள் கொடுத்த விஜய்..!!
விஜய் தரப்பில், இந்த வழக்கு குறித்து காவல்துறையிடமிருந்து எந்த சம்மனும் வரவில்லை என்றும், தற்போதுதான் விவரம் தெரியவந்ததாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இந்தச் சர்ச்சைக்கு மத்தியில், விஜய் தரப்பு திருத்தப்பட்ட ஆவணங்களை தாக்கல் செய்து உள்ளனர். விஜய் சார்பில் தமிழக வெற்றி கழகத்தின் மாவட்ட செயலாளர் சிவா பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்துள்ளார்.
இதையும் படிங்க: புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து என்ன ஆச்சு..? குழம்பிப்போன கூட்டணியை விட்டு தள்ளுங்க..! விஜய் ON FIRE..!!